சிதம்பரம் நடராஜர் தேர் திருவிழா ரத்து: கோவிலுக்குள் நடத்த தீட்சதர்கள் முடிவு
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன தேர் திருவிழா ரத்து செய்யப்பட்டதை அடுத்து கோவிலுக்குள்ளே நடத்திக்கொள்ள பொது தீட்சிதர்கள் முடிவு செய்துள்ளனர்.
சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன திருவிழா கடந்த 6 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கொரோனா பரவல் காரணமாக சுவாமி வீதிஉலா உள்ளிட்ட பல்வேறு பூஜை நிகழ்வுகள் வெளியில் கொண்டுவர படாமல் பக்தர்கள் பங்கேற்று கோவிலுக்குள் ஆகவே நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் பக்தர்கள் பங்கேற்புடன் தேர் மற்றும் தரிசன விழாவை நடத்த வேண்டும் என பா.ஜ ., இந்து முன்னணி, பக்தர் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் மற்றும் மனு அளிப்பு போராட்டம் செய்து வந்தனர். இறுதியாக நேற்று முன்தினம் சிதம்பரம் தொகுதியில் அதிமுக எம்எல்ஏ பாண்டியன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆனாலும் தேர் மற்றும் தரிசன விழாவை வழக்கம்போல் நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை. இதன் காரணமாக இன்று நடைபெறும் தேர்த்திருவிழா ரத்து செய்யப்பட்டதுடன் கோவிலுக்குள்ளே நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இன்று நடைபெறும் தேர் திருவிழாவையொட்டி இது காலை 5 மணிக்கு மேல் நடராஜரும் சிவகாம சுந்தரியும் சித் சபையில் இருந்துபுறப்படுகின்றனர் . அதனைத் தொடர்ந்து உள் பிரகாரத்தை வலம் வரும் சுவாமி அங்கிருந்து புறப்பட்டு ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருள உள்ளார். அதன் பின்பு காலை 9 மணி முதல் 2 மணி வரை சுவாமியை தரிசிக்க பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
அதன் பின்பு பக்தர்கள் அனுமதி முற்றிலுமாக நிறுத்தப்படும். தொடர்ந்து தரிசன நாளான 15ஆம் தேதி அதிகாலை வழக்கம்போல் ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகிறது. அதன் பின்பு மதியம் 2 மணி அளவில் தரிசன விழா நடைபெறுகிறது. அதில் நடராஜரும் சிவகாம சுந்தரியும் நடனமாடியபடி சன்னதிக்கு செல்வார் கள். அதன் பின்பு சுவாமிஜி சபைக்கு சென்றபின் 3 மணியிலிருந்து சுவாமி தரிசனத்திற்கு பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. தொடர்ந்து 10 மணி வரை பொதுமக்கள் சுவாமியை தரிசிக்கலாம்.