உத்தரகோசமங்கை பிரம்ம தீர்த்த குளத்திற்குள் கழிவுநீர் செல்வது நிறுத்தம்
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி இராஜகோபுரம் முன்புறமுள்ள பிரம்ம தீர்த்த குளத்தில் கழிவுநீர் கலந்து வந்தது.
3 ஏக்கர் பரப்பளவு கொண்ட பிரம்ம தீர்த்த தெப்பக்குளத்தில் கடந்த 2000 ஆண்டு வரை பக்தர்கள் புனித நீராடி வந்துள்ளனர். 2003 ஆம் ஆண்டு குளத்தின் நான்கு புறமும் சுற்று சுவர் அமைத்து பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் பிரம்ம தீர்த்த குளத்தைச் சுற்றிலும் நான்கு புறமும் குடியிருப்புகள் ஓட்டல்களின் கழிவுநீர் கலந்து வருவதால் தற்போது வரை பக்தர்கள் புனித நீராட முடியாத சூழ்நிலை நிலவி வந்தது. இது குறித்து தினமலர் நாளிதழில் கடந்த ஜூன் 30 அன்று படத்துடன் செய்தி வெளியானது. அதனை தொடர்ந்து கழிவுநீர் குளத்தினுள் விடுவதற்கு முழுவதுமாக தடை விதிக்கப்பட்டு நோட்டீஸ்கள் விடப்பட்டது.
ராமநாதபுரம் சமஸ்தானம் திவான் கே. பழனிவேல் பாண்டியன் கூறியதாவது; பழமையும், புராண சிறப்பையும் பெற்ற பிரம்ம தீர்த்த குளத்தின் பக்கவாட்டு பகுதியில் 6 அடி அகலத்திற்கு புதிதாக பேவர் பிளாக் கற்கள் பதித்து, சுற்றிலும் மரக்கன்றுகள் வைக்கப்பட்டு முறையான பராமரிப்பு பணிகள் செய்ய உள்ளோம். குளத்தினுள் விடப்பட்ட கழிவுநீர் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் பக்தர்கள் புனித நீராடுவதற்கு குளம் தயாராக இருக்கும் என்றார்.