ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர உற்ஸவம் துவக்கம்
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர உற்ஸவம் கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதனை முன்னிட்டு காலை 9:00 மணிக்கு மாட வீதிகள் சுற்றி கோயிலுக்கு கொடிப்பட்டம் கொண்டுவரப்பட்டது. கொடிமரத்தின் முன்பு சிறப்பு பூஜைகள் செய்து, காலை 10:55 மணிக்கு ரகுராம கொடிப்பட்டம் ஏற்றினார். சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஆண்டாள் ரங்கமன்னாருக்கு பட்டர்கள் சிறப்பு பூஜைகளை செய்தனர். விழாவில் தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன் மற்றும் கோயில் பட்டர்கள் பங்கேற்றனர். கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படாததால் வாசலில் நின்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இக்கோயிலில் வருடந்தோறும் ஆடி மாதம் பூர நட்சத்திரத்தை முன்னிட்டு பெரிய தேர் திருவிழா நடப்பது வழக்கம். இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரம் பக்தர்கள் பங்கேற்பார்கள். கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு பெரிய தேர் திருவிழா நடைபெறவில்லை. இந்த வருடமும் ஆகஸ்ட் 11 அன்று காலை 9:05 மணிக்கு கோயில் வளாகத்திற்குள் தங்க தேரோட்ட வைபவம் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்துள்ளது.