அனைத்து ஜாதி அர்ச்சகருக்கு எதிர்ப்பு; செப்.1ல் உண்ணாவிரதம்
ராமேஸ்வரம் : அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆவதற்கு எதிர்ப்பு தெரிவித்து செப்., 1ல் ராமேஸ்வரத்தில் ஹிந்து தேசிய கட்சியினர் உண்ணாவிரதம் நடத்த உள்ளனர்.
இந்து அறநிலையத்துறை கோயில்களில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்தியது. இதற்கு இந்து அமைப்பும், மடாதிபதிகளும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஹிந்து தேசிய கட்சியினர் ராமேஸ்வரத்தில் உண்ணாவிரதம் இருக்க உள்ளனர். ஹிந்து தேசிய கட்சி மாநில செயலர் ஹரிதாஸ் கூறியதாவது : ராமேஸ்வரம் கோயிலில் 22 தீர்த்தங்கள் மூடி கிடப்பதால் பக்தர்கள் நீராட முடியாமல், வேதனையுடன் திரும்பி செல்கின்றனர். தீர்த்தம் ஊற்றும் யாத்திரை பணியாளர்கள், சிறு வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுநர்கள் வருவாய் இன்றி அவதிப்படுகின்றனர். தீர்த்தங்களை திறக்க கோரியும், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தால் நம் பாரம்பரியம், கலாசாரம் சீரழியும் அபாயம் உள்ளது. இத்திட்டத்தை ரத்து செய்ய கோரி கட்சியின் நிறுவனர் நெல்லை மணி தலைமையில் செப்., 1 ல் ராமேஸ்வரத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவோம், என்றார்.