ராஜகணபதி கோவிலில் 12 லட்சம் ரூபாய் உண்டியல் வசூல்!
சேலம்: சேலம், ராஜகணபதி கோவில் உண்டியல் மூலம், 12 லட்சத்து, 25 ஆயிரத்து, 117 ரூபாய் காணிக்கை கிடைத்துள்ளது.சேலம், சுகவனேஸ்வரர் கோவில் கட்டுப்பாட்டில் சின்னகடை வீதியில் பிரஸித்தி பெற்ற ராஜகணபதி கோவில் உள்ளது. ராஜகணபதி கோவில் உண்டியல், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் திறந்து எண்ணப்படும்.நாமக்கல் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜோதி, சுகவனேஸ்வரர் கோவில் உதவி ஆணையர் பாஸ்கரன், ஆய்வாளர் தமிழரசு தலைமையில், நேற்று, ராஜகணபதி கோவிலில் உள்ள, மூன்று உண்டியல்கள் திறக்கப்பட்டது. பக்தர்கள் செலுத்திய காணிக்கை, சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில், மகளிர் அமைப்புகள் மூலம் எண்ணப்பட்டது. மூன்று உண்டியலிலும், 12 லட்சத்து, 25 ஆயிரத்து, 117 ரூபாய் 50 காசுகளை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். இதில், 202 அமெரிக்கா டாலர், 18 கிராம் தங்கம், 109 கிராம் வெள்ளி ஆகியவை இருந்தது.