உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆய்க்குடி பாலசுப்பிரமணியசுவாமி கோயிலில் அமைச்சர் ஆய்வு

ஆய்க்குடி பாலசுப்பிரமணியசுவாமி கோயிலில் அமைச்சர் ஆய்வு

கடையநல்லூர்: ஆய்க்குடி பாலசுப்பிரமணியசுவாமி கோயிலில் பக்தர்களின் வசதிக்காக சுற்றுலாத்துறை மூலமாக 25 லட்ச ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள இடத்தினை சுற்றுலாத்துறை அமைச்சர் கோகுலஇந்திரா நேற்று ஆய்வு செய்தார். கடையநல்லூர் தொகுதி ஆய்க்குடியில் பிரசித்தி பெற்று விளங்கும் பாலசுப்பிரமணியசுவாமி கோயில் சஷ்டி விழா மிகவும் சிறப்பு பெற்றதாகும். தமிழகத்தில் திருச்செந்தூர் கந்தசஷ்டி விழாவை அடுத்து பக்தர்கள் அதிகமாக கந்தசஷ்டி விழாவில் கலந்து கொள்ளும் கோயிலாக ஆய்க்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இதனை தொடர்ந்து இக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக தங்கும் விடுதி கட்டுவதற்கு அமைச்சர் செந்தூர்பாண்டியன் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் நேரிடையாக கேட்டுக் கொண்டதை அடுத்த சுற்றுலாத்துறை மூலமாக இதற்கான ஏற்பாடு செய்ய முதல்வர் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து 25 லட்ச ரூபாய் செலவில் ஆய்க்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் தங்கும் விடுதி அமைத்திட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பகுதியினை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் கோகுலஇந்திரா, சுற்றுலாத்துறை செயலாளர் ஜெயக்கொடி, மாவட்ட பி.ஆர்.ஓ. உமாமகேஷ்வரி, தென்காசி ஆர்டிஓ ராஜகிருபாகரன், தாசில்தார் தேவபிரான் ஆகியோர் நேற்று பார்வையிட்டு கட்டடம் கட்டுவது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர்.

முன்னதாக ஆய்க்குடி வருகை தந்த அமைச்சருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் ஸ்ரீகாரியம் ரத்னவேலு மற்றும் பணியாளர்கள் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து கடையநல்லூர் தொகுதி அதிமுக சார்பில் தொகுதி செயலாளர் மாரியப்பன், மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம், டவுன் பஞ்., தலைவர்கள் ராதா, குட்டியம்மாள், டாக்டர் சுசீகரன், ஒன்றிய செயலாளர் செல்லப்பன், துணை செயலாளர் சீனித்துரை, கடையநல்லூர் ஒன்றிய செயலாளர் வசந்தம் முத்துப்பாண்டி, யூனியன் தலைவர் பானுமதி, துணைத் தலைவர் பெரியதுரை, ஆய்க்குடி பேரூர் செயலாளர் முத்துகுட்டி, மாணவரணி செயலாளர் திருப்பதி, மாவட்ட கவுன்சிலர் முருகேசன் மற்றும் அதிமுகவினர் அமைச்சரை வரவேற்று சால்வை அணிவித்தனர். தொடர்ந்து பக்தர்கள் தங்குவதற்காக சுற்றுலாத்துறை மூலம் கட்டப்பட உள்ள பணி முறைகள் குறித்து அமைச்சர் சுற்றுலாத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அமைச்சருடன் தென்காசி நகராட்சி தலைவர் பானு, லியாகத்அலி, ஆய்க்குடி கவுன்சிலர்கள் செண்பகவல்லி, ஆறுமுகம், மயில், மாரியப்பன், டவுன் பஞ்., செயல் அலுவலர் ஆதம், குற்றாலம் சேகர் மற்றும் அதிமுகவினர் உடன் வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !