நெல்லை பல்கலை பாடத்தில் ஆண்டாள் சிறுகதை இல்லை!
திருநெல்வேலி: ""நெல்லை பல்கலை தமிழ்பாடத்தில் ஆண்டாள் பற்றிய கதையே இடம் பெறவில்லை, என நெல்லை பல்கலை பேராசிரியர் தெரிவித்தார். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ்இயங்கும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை முதலாம் ஆண்டு தமிழ் பாடத்தில், முதல் பகுதியில் கதைகள், கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. அதில் இடம்பெற்றுள்ள "ஆண்டாள் என்ற சிறுகதையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் குறித்து சர்ச்சையான தகவல்கள் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாயின. இதனால் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நெல்லை பல்கலை தமிழ்த்துறை பேராசிரியர் ஒருவர் கூறியதாவது: நெல்லை பல்கலைக்கு உட்பட்ட இளங்கலை தமிழ்பாடத்தை வடிவமைப்பது கல்லூரி பேராசிரியர்கள்தான். பாடத்திட்டத்தை வடிவமைக்கும்போது ஆண்டாள் குறித்த சிறுகதை சேர்க்க கூறினர். ஆனால் அதில் சர்ச்சை இருந்ததால், சரஸ்வதி என்ற கதை சேர்க்கப்பட்டுள்ளது. எனவே, புதிய பாடங்களை ஒப்புதல் பெற்றுள்ள பாடப்புத்தகத்தை, என்.சி.பி.எச்.,நிறுவனத்தினர் இனிதான் அச்சடிக்க உள்ளார்கள்.அச்சடித்து வெளிவராத புத்தகத்தில் இல்லாத சிறுகதை குறித்து ஏன் சர்ச்சை என தெரியவில்லை, என்றார். வழக்கமாக நெல்லை பல்கலையின் முக்கிய புத்தகங்களை நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தினர்தான் வெளியிடுகின்றனர். அவ்வாறு புத்தகத்தை அச்சிட ஆர்டர் கிடைக்காத யாரோ தனிநபர்கள் கிளப்பிவிட்ட வதந்திதான் இந்த சர்ச்சை என பல்கலை வட்டாரங்கள் தெரிவித்தன.