கோவில்களில் பக்தர்களுக்கு நீண்ட நாட்களுக்கு பின் வாழை இலையில் விருந்து
தொண்டாமுத்தூர்: மருதமலை மற்றும் பேரூர் கோவில்களில், 18 மாதங்களுக்குப்பின், பக்தர்களுக்கு, வாழை இலையில் அன்னதானம் வழங்கப்பட்டது.
தமிழகத்தில், ஹிந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பெரிய கோவில்களில், பக்தர்களுக்கு நாள் தோறும் அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது. கொரோனா தொற்று காரணமாக, கடந்த, 18 மாதங்களாக, கோவில்களில் பக்தர்களுக்கு, பொட்டலமாக அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிலையில், கோவில்களில், பக்தர்களுக்கு வழக்கம் போல, அன்னதான கூடத்தில், வாழை இலையில், அன்னதானம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து, பேரூர் பட்டீஸ்வரர் கோவில், மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், தலா, 100 பேருக்கு, நேற்று பகல், அன்னதானக் கூடத்தில் வாழையிலையில் அன்னதானம் பரிமாறப்பட்டது. 18 மாதங்களுக்கு பின், கோவில்களில் மீண்டும் வழக்கம்போல வாழை இலையில், அன்னதானம் வழங்கப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.