சனிக்கிழமை கோயில்களில் வழிபட அனுமதிக்க வழக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
மதுரை : புரட்டாசி சனிக்கிழமைகளில் கோயில்களை திறந்து பக்தர்கள் வழிபட அனுமதிக்கக்கோரிய வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
சாத்துார் வழக்கறிஞர் லோகய்யாசாமி தாக்கல் செய்த பொதுநல மனு: தமிழக ஊரடங்கில் எவ்வித கட்டுப்பாடுமின்றி பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த இடங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு ஹிந்துவும் புரட்டாசி மற்றும் மார்கழியில் குறிப்பாக சனிக்கிழமைகளில் கடவுள் நாராயணனை வழிபடுவதன் முக்கியத்துவத்தை உலகம் அறிந்துள்ளது. புரட்டாசி சனிக் கிழமைகளில் (அக்.,2, அக்.,16) ஏகாதசி வருகிறது.எனவே கோயில்களில் பக்தர்கள் வழிபட அனுமதிக்கக்கோரி தமிழக அரசுக்கு மனு அனுப்பினேன்.பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு லோகய்யா சாமி மனு செய்தார்.நீதிபதிகள் எம்.துரை சுவாமி, கே.முரளிசங்கர் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்: கோயில்கள் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்படுகின்றன. இந்த உத்தரவை அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும்.நீதிபதிகள்: அதை அரசு பார்த்துக் கொள்ளும்.அரசு வழக்கறிஞர்: ஆகம விதிகள்படி கோயில்களில் பூஜைகள் மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு விவாதம் நடந்தது. நீதிபதிகள் தமிழக தலைமைச் செயலாளர், அறநிலையத்துறை கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு நவ.,2க்கு ஒத்திவைத்தனர்.