உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மும்பையின் காவல் தெய்வம்

மும்பையின் காவல் தெய்வம்


மகாராஷ்டிராவின் தலைநகர் மும்பை என்பது அறிந்ததே. இந்த பெயருக்கு காரணமான கோயில் எது தெரியுமா... இந்த ஊரின் காவல் தெய்வமான மும்பாதேவி. சிவபெருமானுக்குரிய காளை வாகனத்தில் காட்சி தரும் இந்த அம்மனை தரிசிக்க நவராத்திரி ஒன்பது நாட்களும் பக்தர்களின் கூட்டம் அலைமோதும்.    
பிரம்மாவிடம் சாகாவரம் பெற்ற அசுரன் மும்பார்க். ஆணவம் கொண்ட அவன் தேவர்களையும், மனிதர்களையும் துன்பப்படுத்த அவர்கள் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். அவர் சிவனுடன் இணைந்து அரக்கனை கொல்லத் திட்டமிட்டார். இருவரும் தங்கள் உடலிலிருந்து ஒரு பெண் சக்தியை உருவாக்கி போர் புரியச் செய்தனர். அவளும் அசுர வதம் செய்து உயிர்களை பாதுகாத்தாள். அவளே மும்பாதேவி என்னும் பெயரில் இங்கிருக்கிறாள்.    
 மும்பை பகுதியைச் சேர்ந்த ‘முங்கா’  எனப்படும் மீனவர்கள் அடிக்கடி கடல் சீற்றத்தால் அவதிப்பட்டு வந்தனர். இதிலிருந்து விடுபட அம்பிகையைச் சரணடைய சீற்றம் தணிய ஆரம்பித்தது. இதற்கு நன்றிக்கடனாக ‘முங்காதேவி’ அம்மனுக்கு கோயில் கட்டி வழிபடத் தொடங்கினர். இந்த அம்மனே காலப்போக்கில் மும்பாதேவி என மாறியது.
   சிவனிடம் இருந்து தோன்றியவள் என்பதால் மும்பாதேவி காளை வாகனத்துடன் இருக்கிறாள். கருவறையின் முன்பு இரண்டு விளக்குத் துாண்கள் உள்ளன. ஒன்று செங்கல்லாலும், மற்றொன்று கல்லாலும் ஆனது. கருவறை வெள்ளை மார்பிள் கற்களால் ஆனது. வாசலில் வெள்ளி கவசமிட்ட துவாரபாலகர்கள் உள்ளனர்.  மும்பாதேவி மராத்திய கலாசாரத்தில் ஆடை, ஆபரணங்களை சூடியிருக்கிறாள்.
    நவராத்திரி முதல்நாளில் கருவறையைச் சுற்றி அகல் விளக்குகள் ஏற்றப்படும். அம்மனுக்கு முன் நவதானியம், அரிசியை படையலாக வைத்து வெண்கலபானையில் தண்ணீர் நிரப்பியும் வைக்கின்றனர். பானைக்குள் வெற்றிலை, பாக்கு, மலர்களை இடுகின்றனர். இதை ‘கட ஸ்தாபனா’ என்கின்றனர். நவதானியங்களை மண்சட்டிகளில் விதைத்து தண்ணீர் தெளிக்கின்றனர். தினமும் மாலையில் புல்லாங்குழல், ‘சாவ்கதா’ என்ற டிரம்களை இசைத்து இசைக்கலைஞர்கள் அம்மனை வழிபடுகின்றனர்.
 எட்டாம் நாளான துர்காஷ்டமியன்று கோயிலின் முன் சதுர வடிவில் குழி தோண்டி அதில் தேங்காய்களை இட்டு வெண்ணெய் ஊற்றி எரிக்கின்றனர். இதில் கிடைக்கும் சாம்பலை பெண்கள் புருவத்தில் கண் மை போல இட்டுக் கொள்கின்றனர். பத்தாம் நாள் தசராவன்று முளை விட்டு வளர்ந்த நவதானியங்களை வேரோடு பிடுங்கி அம்மனுக்கு படைக்கின்றனர். எதிர்பார்ப்பு நிறைவேறுவதற்காக இதை பிரசாதமாக பெறும் பெண்கள் தலையிலும், ஆண்கள் தலைப்பாகையிலும் செருகி கொள்கின்றனர்.
எப்படி செல்வது: புனேயில் இருந்து 146 கி.மீ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !