உடுமலை கோவில்களில் தரிசனத்திற்கு அனுமதி
ADDED :1452 days ago
உடுமலை: உடுமலை பகுதிகளிலுள்ள பிரதான கோவில்களில், பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதால், ஏராளமானவர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.கொரோனா தொற்றுப்பரவலை தடுக்கும் வகையில், கோவில்கள் திறக்கப்பட்டாலும், வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.இந்நிலையில், ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, நேற்று முதல் அனைத்து நாட்களிலும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கி அரசு உத்தரவிட்டது.இதனையடுத்து, திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில், பிரசன்ன விநாயகர் கோவில், மாரியம்மன் கோவில் உள்ளிட்ட அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோவில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.நேற்று விஜயதசமி நாள் என்பதால், மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பிரதான கோவில்களில், ஏராளமான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர்.