உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நோய் தீர்க்கும் குறிப்புகளுடன் கருடக்கற்கள் கண்டுபிடிப்பு

நோய் தீர்க்கும் குறிப்புகளுடன் கருடக்கற்கள் கண்டுபிடிப்பு

 அலங்காநல்லுார் : அலங்காநல்லுார் பெரிய ஊர்சேரி, விராட்டிபத்தில் தலா 7 அடி உயரமுள்ள நோய் தீர்க்கும், விஷம் முறிக்கும் குறிப்புகள் பொறிக்கபட்ட இரு கருடகற்களை மதுரை மூத்த தொல்லியல் ஆய்வாளர் ராஜகோபால், கோயில் கட்டடக்கலை, சிற்பத்துறை ஆய்வாளர் தேவி கண்டுபிடித்தனர்.

பெரியஊர் சேரி கருடக்கல்லில் மேலிருந்து கீழ் 22 வரிகள் கொண்ட தமிழ் எழுத்து கல்வெட்டில் இக்கல்லை வைத்தவர், பொருள் உதவி செய்தவர் குறித்த தகவல் உள்ளன. விஷம் தீண்டியவர்கள் இக்கல்லை சுற்றி வந்து மூன்று முறை முட்டினால் விஷம் இறங்கும், விஷக்கடி வாங்கியவர் வர முடியாத பட்சத்தில் அதை பார்த்தவர் கம்பத்தில் முட்டி வேட்டி நனைத்து பிழிந்து போட்டு போகும் போது, வேட்டி காய காய விஷம் இறங்கும் என்ற குறிப்பு பொறிக்கப்பட்டுள்ளது.

கல் பக்கவாட்டில் கல்லை கைகளால் அடித்து செய்தவர் தகவல் உள்ளது.கல்லின் கீழே நின்ற நிலையில் கிரீட மகுடம், ஊரு ஹஸ்தத்தம், படமெடுக்கும் பாம்பு, சங்கு சக்கரம், தாடனஹஸ்த்தில் வதம் செய்யும் குறியீட்டுடன் கேயூரம் காப்பு, அரையாடை, கழுத்தில் நாகத்தினை ஆபரணமாக அணிந்த அழகிய கருடாழ்வார் சிலை உள்ளது. தலைக்கு பக்கவாட்டில் சூரியன், சந்திரன் உள்ளது.

கீழே ஓம் நமசிவாய, ஓம் சரவணபவ என்பதை சிறு கட்டத்தில் தலைகீழ் எழுத்தாக பொறித்துள்ளனர்.விராட்டிபத்து துாண் வடிவ செவ்வக கருடக்கல் மேல் நான்கு புறமும் 4 வரிகளில் தமிழ் கல்வெட்டு உள்ளது. அதில் ஓம் சற்குரு கெருடாழ்வாராய நம என்று உள்ளது.துாண் மேல் நின்ற பறவையின் காலுக்கு இடையில் படம் எடுக்கும் நாகம் செதுக்கப்பட்டுள்ளது. பாம்புக்கு எதிரியான கருடனை வழிபட்டால் விஷம் முறியும் என்ற நம்பிக்கையில் கருடக்கற்கள் செதுக்கப்பட்டுள்ளது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !