பழநி கந்தசஷ்டி விழாவில் திருக்கல்யாணம் கோலாகலம்
பழநி : பழநி முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழாவில் திருக்கல்யாணம் நடந்தது. மணக்கோலத்தில் சண்முகர், வள்ளி , தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பழநி கந்தசஷ்டி விழாவில் இன்று (நவ.,10) காலை 9:00 க்கு மேல் 10:30 மணிவரை மலைக்கோயிலில் வள்ளி, தேவசேனா சமேத சண்முகர் திருக்கல்யாண கோலாகலமாக நடைபெற்றது. மணக்கோலத்தில் சண்முகர், வள்ளி , தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பகல் 12:30 மணிக்குப்பின் வழக்கம்போல் மலைக்கோயிலில் தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். பெரியநாயகியம்மன் கோயிலில் மாலை 6:30 க்கு மேல் 7:30 மணிக்குள் பெரியநாயகியம்மன் கோயிலில் வள்ளி தேவசேனா முத்துக்குமாரசாமி திருக்கல்யாண உற்சவம் நடைபெறும்.
திண்டுக்கல் மாவட்டம் பழநி மலைக்கோயிலில் நவ.4ல் காப்பு கட்டுதலுடன் துவங்கிய கந்தசஷ்டி விழா நவ.10 வரை நடக்கிறது. நேற்று பகல் 12:00 மணிக்கு உச்சிகால பூஜை, பகல் 1:30 மணிக்கு சாயரட்சை பூஜை, பகல் 2:45 மணிக்கு மேல் மலைகோயிலில் வேல் வாங்குதல் நடந்தது. அதன்பின் சன்னதி திருகாப்பிடப்பட்டு, மலைக்கோவிலில் இருந்து சின்னகுமாரசாமி புறப்பட்டு கிரிவீதி வந்தடைந்தார். பெரியநாயகி அம்மன் கோயிலில் இருந்து வள்ளி தேவசேனா சமேத முத்துக்குமார சுவாமி மங்கம்மாள் மண்டபம் வந்தடைந்தார்.
பக்தர்களின்றி சூரசம்ஹாரம்: நேற்று காலையில் பெரியநாயகியம்மன் கோயிலில் இருந்து நான்கு சூரன்களும் கிரிவீதி கொண்டுவரப்பட்டனர். கந்தசஷ்டி விரதம் இருந்த பக்தர்கள் தண்டு விரதம் முடித்து முருகனை வழிபட்டனர். மாலை 5:45 மணிக்கு மேல் நான்கு கிரிவீதிகளிலும், வடக்கே தாரகாசுரன், கிழக்கே பானுகோபன், தெற்கே சிங்கமுகாசுரன், வடக்கே சூரபத்மன் முத்துக்குமாரசுவாமியால் வதம் செய்யப்பட்டனர். இரவு 9:00 க்கு மேல் கோயில் சார்பாக வெற்றி விழா நடந்தது. மலைக்கோயிலில் சம்ப்ரோக்ஷணம் செய்யப்பட்டு ராக்கால பூஜை நடந்தது. சூரசம்ஹார நிகழ்வுக்கு கோயில் நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகளும் செய்து இருந்தது. மாவட்ட கலெக்டர் விசாகன், போலீஸ் எஸ்.பி., ஸ்ரீனிவாசன், கோயில் இணை ஆணையர் நடராஜன், உதவி கமிஷனர் செந்தில்குமார் உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர். ஏ.டி.எஸ்.பி., லாவண்யா தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.