திருத்தணி கோவிலில் உற்சவருக்கு திருக்கல்யாணம்
திருத்தணி-திருத்தணி முருகன் கோவிலில் நேற்று நடந்த திருக்கல்யாணம் நிகழ்ச்சியில் பக்தர்கள் அமர்ந்து தரிசனம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டது.திருத்தணி முருகன் கோவிலில், கடந்த 4ம் தேதி கந்த சஷ்டி விழா துவங்கியது. கொரோனா தொற்று காரணமாக லட்சார்ச்சனை நடத்தப்படவில்லை.ஆனால், ஏழு நாட்களும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் உற்சவர் பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.அதே நேரத்தில் பக்தர்கள் தரிசனத்திற்கு காவடி மண்டபத்தில் உற்சவர் சண்முகப் பெருமான் வைக்கப்பட்டார். விழாவின் ஆறாவது நாளான நேற்று முன்தினம் உற்சவருக்கு புஷ்பாஞ்சலி நடந்தது.விழாவின் நிறைவு நாளான நேற்று, காலை 10:30 மணிக்கு உற்சவ பெருமானுக்கும், தெய்வானைக்கும் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது. இதிலும் பக்தர்கள் அமர்ந்து தரிசனம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால், பக்தர்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டனர்.நேற்று மழையிலும், மலைக்கோவிலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்திருந்து, மூலவரை நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.