உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுவாமிமலையில் கார்த்திகை திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

சுவாமிமலையில் கார்த்திகை திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே சுவாமிமலையில், திருக்கார்த்திகை விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
 
முருகனின் ஆறுபடைவீடுகளில், நான்காவது படைவீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில், மூர்த்தி,தலம், தீர்த்தம் ஆகியவற்றால் சிறப்புடையதாகவும், தந்தைக்கு ஓம் எனும் பிரணவ மந்திரத்தை உபதேசித்த குருமூர்த்தியாக திகழ்வதால் சிவகுருநாதனாக எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.  
 
மேலும் பிரபவ முதல் அட்சய முடிய அறுபது தமிழ் வருட தேவதைகளும், இக்கோவிலில் திருப்படிகளாக அமையப்பெற்று முருகனுக்கு சேவை செய்து வருகின்றன. இத்தகைய சிறப்புடைய சுவாமிநாத சுவாமி கோவிலில் திருக்கார்த்திகை விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்று(11ம் தேதி) காலை இவ்விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
அப்போது சுப்பிரமணியசுவாமி வள்ளி-தெய்வாணையுடன் சிறப்பு அலங்காரத்தில் எளுந்தருளினர். பின்னர் கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, மங்களவாத்தியம் முழுங்க விழா கொடியேற்றம் நடந்தது. வரும் 12,13 ஆகிய தேதிகளில் ஊஞ்சல் உற்சவமும், 15ம் தேதி பஞ்சமூர்த்தி புறப்பாடும், 19ம் தேதி திருக்கார்த்திகை அன்று இரவு 8 மணிக்கு தீபக்காட்சியும், அதைத் தொடர்ந்து சுவாமி புறப்பாடும் உள் பிரகாரத்தில் நடைபெற உள்ளது. தொடர்ந்து, சொக்கப்பானை கொளுத்தும் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. இதற்கிடையில் கந்தசஷ்டி விழாவின் ஒருபகுதியாக நேற்று மாலை கோவிலின் வசந்த மண்டபத்தில் சண்முகசுவாமி வள்ளி- தேவசேனா திருக்கல்யாணம் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !