மதுரை சித்திர சாவடி ராமயண ஓவியங்களை செயற்கை நுண்ணறிவால் சீரமைக்கலாம்
மதுரை, மதுரை - மேலுார் ரோடு நரசிங்கம்பட்டியில் பாரம்பரிய பெருமை பேசும் சித்திர சாவடியில் அழிந்து வரும் ராமாயண தொடர் ஓவியங்களை செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் தொழில்நுட்ப முறையில் மறுசீரமைப்பு செய்து, பாதுகாக்க மதுரை எழுத்தாளர் நிரஞ்சனா தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அழகர்கோவில் வசந்த மண்டபம், ராமநாதபுரம், போடி அரண்மனை, புதுக்கோட்டை கோயில்களில் ராமாயண ஓவியங்கள் உள்ளன. உலர் சுவரில் டெம்ப்ரா, ஈர சுவரில் பிரஸ்கோ முறை ஓவியம் வரைவர். மூலிகை ஓவியம் அழியும் என்பதால் இச்சாவடியில் மண், கல்லில் எடுத்த கலர் பொடியில் டெம்ப்ரா ஓவியம் வரைந்துள்ளனர். இதை புதுச்சேரி பிரன்ச் இன்ஸ்டிடியூட் ஆவணம் செய்துள்ளது.
நிரஞ்சனா கூறியதாவது: இச்சாவடியில் நாயக்க மன்னர் காலத்தில் தசரத மகாராஜா நடத்தும் புத்திர காமேஷ்டி யாகம், ராமரின் தடாகை வதம், சீதா, ராமர், லட்சுமணன் கங்கை கரையை கடக்க உதவும் குகன், தேரில் பயணிக்கும் சீதா, ராம, லட்சுமணன் உட்பட பல ராமாயண நிகழ்வுகள் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன. கூரை இடிந்ததால் வெயில், மழையில் அழியும் ஓவியங்களை செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் பழமை மாறாமல் மறுசீரமைப்பு செய்யலாம். அப்படி தான் கர்நாடகா பாதாமி குடவரை, அஜந்தா குகை கோயில் ஓவியங்கள் சீரமைப்பு செய்துள்ளனர். மகாராஷ்டிரா பிதல்கோரா குகை ஓவியங்கள் சீரமைக்கப்பட உள்ளன. புகைப்பட, வரைபட கலைஞர்கள், கலாச்சார, தொழில்நுட்ப வல்லுனர்கள் டிஜிட்டல் மறுசீரமைப்பு செய்வர். சீரமைக்கப்படும் ஓவியங்கள், கையெழுத்து பிரதிகள் நார்வே ஆர்டிக் வொர்ல்ட் ஆர்கைவ் காப்பகத்தில் பாதுகாக்கப்படுகிறது. எனவே சித்திர சாவடி, பாரம்பரிய ஓவியங்கள் இம்முறையில் சீரமைக்க வேண்டும் என்றார்.