உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதம்பரத்தில் இரு கோயில்களை இடிக்க ’நோட்டீஸ்’ - தமிழக பா.ஜ., கண்டனம்; போராட்டம் அறிவிப்பு

சிதம்பரத்தில் இரு கோயில்களை இடிக்க ’நோட்டீஸ்’ - தமிழக பா.ஜ., கண்டனம்; போராட்டம் அறிவிப்பு

சிதம்பரம் : கடலுார் மாவட்டம் சிதம்பரம் கீழ வீதியில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோவில் மற்றும் தேர் நிலைக்கு எதிரில் இருக்கும் தான்தோன்றி விநாயகர் கோவிலை நாளை இடிக்க போவதாக அந்தக் கோவில்களின் நிர்வாகிகளுக்கு அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹிந்து முன்னணி சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதேபோல தமிழக பா.ஜ.வினரும் கோவில் இடிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பா.ஜ. வழக்கறிஞர் பிரிவு மாநில செயலர் அஸ்வதாமன் கூறியதாவது: போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் அமைந்துள்ள இரு கோவில்களை அரசு நிலத்தில் அமைந்துள்ளது என்ற காரணம் கூறி இடிப்பதற்கு தமிழக அரசு முனைப்பு காட்டுகிறது. இதுமட்டுமின்றி தமிழகத்தில் பல இடங்களிலும் இந்து கோவில்கள் இடிக்கப்பட்டு வருகின்றன. மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். உடல்நிலை சரியில்லாமல் இருந்த போது மக்கள் பிரார்த்தனை செய்த அம்மன் கோவில் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இருந்தது. உயர்நீதிமன்ற வளாகம் எதிரே ஆலமரத்தடியிலும் ஒரு அம்மன் கோவில் இருந்தது. அந்த இரு கோவில்களாலும் யாருக்கும் எந்த இடைஞ்சலும் கிடையாது. ஆனாலும் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு பின் அவ்விரு கோவில்களும் இடிக்கப்பட்டன.

பொருளாதார நெருக்கடி: அந்த கோவில்களை சுற்றி பலரின் வாழ்வாதாரம் இருந்தது. கோவில்களை நம்பி பிழைப்பு நடத்தியோர் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகினர். தற்போது அந்த இடத்தில் சிறு பிள்ளையார் சிலை வைத்து வழிபட்டு வந்தனர். அதற்கும் அதிகாரிகள் தடை ஏற்படுத்தி வருகின்றனர். இதேபோல கோவையில் இருந்த பல கோவில்கள் தரைமட்டமாக்கப்பட்டன. இது ஹிந்துக்கள் மனதை புண்படுத்தியுள்ளது. அரசு நிலங்களில் இருப்பதாக கூறி வழிபாட்டு தலங்களை அகற்றுகின்றனர். ஆனால் அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் இந்த நடைமுறையை பின்பற்றுவதில்லை. ஒருதலைபட்சமாக செயல்படும் அதிகாரிகள் இந்து கோவில்களை மட்டுமே திட்டமிட்டு தகர்க்கின்றனர். அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட ஒரு சர்ச் தொடர்பான வழக்கில் தமிழக அரசு ’அந்த சர்ச் நுாறு ஆண்டுகளுக்கும் மேலானது. அதனால் இடிக்க தேவையில்லை’ என கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. கலெக்டர் அலுவலகம் முதல் கழிவறை கட்டுவது வரை அத்தனை காரியங்களுக்கும் கோவில் இடத்தை எடுத்து கொள்ளும் மாநில அரசு அரசு நிலத்தின் ஒரு சிறு பகுதியில் ஹிந்து கோவில் யாருக்கும் இடைஞ்சல் இல்லாமல் இருந்தாலும் அதை அனுமதிப்பதில்லை. கோர்ட்டில் அனுமதி பெற்று உடனே இடித்து விடுகின்றனர்.

பின்பற்றாதது ஏன்?: கோவில் சொத்தை எடுத்து அரசு அலுவலகம் கட்டும் அரசு சிறு கோவில்களுக்காக அரசு சொத்தை விட்டுக் கொடுக்காதா? இந்து கோவில் ஆக்கிரமிப்பு என்றால் அதை உடனே அரசு இடிக்கிறது. அதே நடைமுறையை சர்ச்சுகளுக்கும் பின்பற்றாதது ஏன்?சிதம்பரம் ஆஞ்சநேயர் மற்றும் விநாயகர் கோவில்களை தமிழக அரசிடம் இருந்து காப்பாற்ற பா.ஜ. சார்பில் போராட உள்ளோம். கோவில்களை இடிப்பதாக கூறப்படும் நாளை பா.ஜ., சார்பில் நடக்கும் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்க உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !