மீனாட்சி அம்மன் கோயில் வீரவசந்தராய மண்டப சீரமைப்பு பணி:திருப்பதி ஸ்தபதி உட்பட 4 பேர் விண்ணப்பிப்பு
மதுரை:மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீ விபத்து நடந்த வீரவசந்தராய மண்டபத்தை சீரமைக்க மூன்றாவது முறையாக டெண்டர் விடப்பட்டதில் திருப்பதி, திருச்சி உட்பட 4 நகரங்களின் ஸ்தபதிகள் விண்ணப்பித்துள்ளனர். இக்கோயிலில் 2018 பிப்., 2ல் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இம்மண்டபம் முற்றிலும் சிதைந்தது. இதை சீரமைக்க கற்கள் வெட்டி எடுக்கும் பணிக்காக ரூ.6.40 கோடியும், மண்டபத்தை வடிவமைக்க ரூ.11.70 கோடியும் ஒதுக்கப்பட்டது.
கற்கள் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள களரம்பள்ளி மலையடிவாரப் பகுதியான பட்டிணம் கிராம குவாரியில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டு கோயில் நிர்வாகத்திற்கு சொந்தமான செங்குளம் பண்ணையில் வைக்கப்பட்டு உள்ளன.மண்டபத்தை சீரமைக்க இருமுறை டெண்டர் விடப்பட்டது. ஆனால் ஒருவர் மட்டுமே விண்ணப்பித்திருந்ததால் டெண்டர் ரத்து செய்யப்பட்டது. தற்போது மூன்றாவது முறையாக டெண்டர் விடப்பட்டதில் திருப்பதி, திருச்சி, திருப்பூர் ஸ்தபதிகள், ஆந்திரா ஸ்தபதி ஒருவர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் ஒருவரை தொழில்நுட்ப தகுதி அடிப்படையில் தேர்வு செய்து அரசின் ஒப்புதலுக்கு பின் பணி வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், இணைகமிஷனர் செல்லத்துரை செய்து வருகின்றனர்.