ஐயப்ப பக்தர்களுக்கு அறிவுறுத்தல்
புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.புதுச்சேரி இந்து சமய நிறுவனங்கள் துறை ஆணையர் சிவசங்கரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு, புதுச்சேரி உள்ளிட்ட தென் மாநில ஐயப்ப பக்தர்களுக்கான வசதிகள், கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் காணொலி வழியாக நடந்தது. அதன்படி, இன்று (16ம் தேதி) முதல் மகரவிளக்கு பூஜை வரை சபரிமலையில் பக்தர்களை அனுமதிப்பதற்கு, பல்வேறு வழிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. கேரளா போலீஸ் மூலம் இயக்கப்படும் மெய்நிகர் வரிசையின் மூலம் பதிந்து நேரம், தேதியுடன் கூடிய அனுமதி அட்டை பெற்றவர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். பக்தர்கள் நிலக்கல் அடிவாரத்தை அடைவதற்கு 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழ் அல்லது இரண்டு கட்ட தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் கொண்டு வர வேண்டும். பக்தர்கள் பம்பையில் நீராட அனுமதிக்கப் படுவர். புதுச்சேரி அரசு மூலம் கொரோனா பரிசோதனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. புதுச்சேரி அவசரகால மையம் 0413-1077, 1070, 0413-2253407 மற்றும் போலீஸ் கட்டுப்பாட்டு அறை எண் 0413-1030 தொடர்பு கொள்ள வசதிகள் உள்ளன. எனவே பக்தர்கள் உரிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு சாமி தரிசனம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.