ஆதிபுரீஸ்வரர் கவசம் திறப்பு நிகழ்ச்சி: சிறப்பு அலங்காரத்தில் தியாகராஜர்
திருவொற்றியூர் : ஆதிபுரீஸ்வரர் கவசம் திறப்பு நிகழ்வின் கடைசி நாளான நேற்று, தலைமை செயலர் உட்பட ஏராளமானோர் சாமி தரிசனம் செய்தனர்.
சென்னை, திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில், 2,000 ஆண்டுகள் பழமையானது. இங்கு, ஆண்டு முழுதும், மூலவர் ஆதிபுரீஸ்வரர், கவசத்துடன் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். ஆண்டின், கார்த்திகை மாதம், பவுர்ணமி தினத்தன்று கவசம் திறக்கப்பட்டு, மூன்று நாட்களுக்கு, புணுகு சாம்பிராணி தைலாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். நேற்று ஆதிபுரீஸ்வரரை கவசமின்றி தரிசிக்க, ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.ஆண்டுக்கொருமுறை மட்டும் நடைபெறும் இந்த அரிய நிகழ்வை காண, தமிழகம் முழுதும், லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவர். இம்முறை, கொரோனா பரவல் காரணமாக, அரசின் வழிகாட்டு நெறிமுறை படி, கவசம் திறப்பு நிகழ்வில் பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். அதன்படி, முக கவசம், தனிமனித இடைவெளி, உடல் வெப்பநிலை பரிசோதனை உள்ளிட்ட விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டன. அர்த்தஜாம பூஜைக்கு பின், ஆதிபுரீஸ்வரருக்கு மீண்டும் கவசம் அணிவிக்கப்பட்டது. இனி, ஆதிபுரீஸ்வரை கவசமின்றி தரிசிக்க, ஓராண்டு காத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.