திருமலையில் கனமழை: அருவிகளில் வெள்ளப் பெருக்கு
திருப்பதி: திருமலையில் பெய்த கன மழை காரணமாக அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் மலைப் பாதையில் 13 இடங்களில் மண் சரிந்து, போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருமலையில் பெய்து வரும் கன மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. மாடவீதியை சுற்றி மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பல இடங்கள் வெள்ளக்காடாக மாறின. மழை காரணமாக அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மலைப்பாதையில் 13 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. அதனால் திருமலைக்கு செல்லும் மலைப் பாதைகள், நடைபாதை மார்க்கங்கள் மூடப் பட்டன. மாலையில் மண்சரிவுகள் அகற்றப்பட்டு பாதை சீர்செய்யப்பட்டு போக்குவரத்து துவங்கியது. மேலும் மழை காரணமாக தரிசன டிக்கெட் முன்பதிவு செய்து கொண்டு தரிசனம் செய்ய முடியாத பக்தர்கள் வேறு ஒரு நாளில் வந்து தரிசனம் செய்ய தேவஸ்தானம் அனுமதி வழங்கிஉள்ளது.
கோவில் சேதம்: திருப்பதி அருகே பாடிபேட்ட பகுதியில் சொர்ணமுகி ஆற்றங்கரையில் பழங்கால சிவன் கோவில் இருந்தது. ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கு காரணமாக சிவன் கோவில் முற்றிலும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. கடப்பா மாவட்டம் ராஜம்பேட்டை அருகேயுள்ள கொளத்துார் அணை முழு கொள்ளளவை எட்டியது. திடீரென அணை உடைந்து கிராமங்களில் நீர் சூழ்ந்ததால் அப்பகுதி மக்கள் அனைவரும் மற்ற கிராமங்களிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளனர். கிராம மக்கள் அருகில் உள்ள மலை மீது ஏறி நிற்கின்றனர். கடப்பாவில் வெள்ளத்தில் அடித்து சென்ற பஸ்சிலிருந்து, 30 பயணிகளை போலீசார் பத்திரமாக மீட்டனர்.