1000 ஆண்டு பழமைவாய்ந்த கோயில்: புதுப்பிக்க கோரிக்கை
சோழவந்தான்: சோழவந்தானில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த பொய்கை விநாயகர் கோயிலை புதுப்பிக்க அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்குள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள பழமையான இக்கோயில் உக்கிர பாண்டிய மன்னரால் கட்டப்பட்டது. பின் ராணி மங்கம்மாள் கோயில் முன் மண்டபம் எழுப்பி இடது புறம் சொர்ணமவுலீஸ்வரர், நந்தி சிலை வைத்தார். வலதுபுறம் வைத்த பராசக்தி சிலை பல ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனது. மேலும் இடது கையால் மயிலை அணைத்த சிவகாசி கழுகுமலை முருகன் சிலை போல் இங்கும் உள்ளது. தற்போது தினமும் ஒரு கால பூஜை நடக்கிறது. இக்கோயிலுக்கு சொந்தமான நிலம் ரிஷபம், மாடக்குளத்தில் இருப்பதாக கல்வெட்டுக்கள் உள்ளன. இந்தக் கோயிலை அறநிலையத் துறையினர் முறையாக பராமரிக்காமல் விட்டு விட்டனர். இதனால் கோயில் கட்டடம் முழுவதும் பல்வகை மரங்கள் வளர்ந்துள்ளன. கோயில் கருவறைக்குள் பெருச்சாளிகள் துளையிட்டு வந்து செல்வதால் அஸ்த்திவாரம் ஆட்டம் கண்டுள்ளது. ஜெனகை மாரியம்மன் கோயில் நிர்வாக அதிகாரி இளமதி: மாநில குழுவின் ஒப்புதலுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது, அனுமதி கிடைத்தவுடன் கோயில் திருப்பணிகள் துவங்கும்,என்றார்.