துன்பத்தில் பெரியது பிறவி துன்பம் காமாட்சிபுரி ஆதீனம் கருத்து
பல்லடம்: துன்பத்தில் பெரியது பிறவித் துன்பம் என, சித்தம்பலத்தில் நடந்த அமாவாசை பூஜையில், காமாட்சிபுரி ஆதீனம் கருத்து தெரிவித்துள்ளார்.
பல்லடம் அடுத்த, சித்தம்பலம் நவகிரக கோட்டையில், அமாவாசை சிறப்பு வழிபாடு நடந்தது. காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் பங்கேற்று பேசியதாவது: இறைவன் மிகப்பெரியவன். இறைவனிடம், நமக்கு அது நடக்க வேண்டும், இது நடக்க வேண்டும் என, நமது ஆசைகளை கோரிக்கையாக வேண்டிக் கொள்கிறோம். பூஜை செய்து விட்டால் அனைத்து பாவங்களும் போய்விடும் என்று நினைத்து, சிலர் பாவங்கள் செய்கின்றனர். ஒரு செயலை தவறு என்று தொடர்ந்து அறிவுறுத்திய பிறகும், மீண்டும் அதே தவறை செய்வது பொருத்தமற்றது. துன்பத்தில் பெரியது பிறவித் துன்பம். மனிதனாக பிறந்து தெய்வமாக மாறியவர்கள் ஏராளம். ஜனனம் என்பது மிகவும் கடினமானது. ஏழு பிறவி எடுத்து, 700 ஆண்டுகள் வாழ்ந்தாக வேண்டும் என்றார். முன்னதாக, அமாவாசையை முன்னிட்டு மகா ம்ருத்யுஞ்ஜய வேள்வி வழிபாடு நடந்தது. தொடர்ந்து, நவகிரகங்கள், மற்றும் சிவன், பார்வதிக்கு பூஜைகள் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில் தம்பதி சமேதராக சிவபெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.