உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பளிங்கு சபை நடராஜர்

பளிங்கு சபை நடராஜர்


சிவனடியார்களான நாயன்மார்களின் பெருமையை பறை சாற்றும் விதமாக நெய்வேலி திருத்தொண்டர் கோயில் திகழ்கிறது. இங்குள்ள மூலவர் நடராஜர் காண்போரை கவரும் விதத்தில் பிரம்மாண்டமாக இருக்கிறார். திருத்தொண்டர் கோயில் என பெயர் இருந்தாலும் நடராஜர் கோயில் என்றே அழைக்கின்றனர். இங்கு சுவாமிக்கு பளிங்குசபை நடராஜர் என்றும் பெயருண்டு.  
மூலவர் நடராஜரின் சிலை ஐம்பொன்னாலானது. இதன் உயரம் 10 அடி 1 அங்குலம். அகலம் 8 அடி 4 அங்குலம். எடை 2 ஆயிரத்து 420 கிலோ. அருகிலுள்ள சிவகாமி அம்மன் சிலை 7 அடி உயரமும், 750 கிலோ எடையும் கொண்டது. ‘மாணிக்கவாசகன் சொல்லச் சொல்ல திருவாசகம் எழுதியது திருச்சிற்றம்பலமுடையான்’ என சிதம்பரம் நடராஜரே கையெழுத்திட்ட பெருமை திருவாசகத்திற்கு உண்டு. இதன் அடிப்படையில் இங்கு நடராஜருக்கு ‘அழகிய திருச்சிற்றம்பலமுடையான் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. நடராஜரின் நடனத்திற்கேற்ப கையில் தாளத்துடன் சிவகாமி ‘ஓசை கொடுத்த நாயகி’ என அழைக்கப்படுகிறாள். சுவாமியின் பாதத்தின் கீழ் திருமூலர், வியாக்ரபாதர், பதஞ்சலி ஆகியோர் உள்ளனர்.
 தன்னை விட தன் அடியார்களை வழிபடுவதில் தான் சிவபெருமானுக்கு விருப்பம் அதிகம். அதனால் சிவனடியார்களான அறுபத்து மூன்று நாயன்மார் சன்னதி இங்கு பிரதானமாக உள்ளது.  பக்தர்கள் அவரவர் நட்சத்திரத்திற்குரிய நாயன்மாரை வழிபட்டால் விருப்பம் நிறைவேறும். விநாயகர், சந்திரசேகரர், பார்வதி, மாணிக்கவாசகர், சேக்கிழார், தொகையடியார் சன்னதிகளும் உள்ளன.
 இங்குள்ள செம்பொற்சோதிநாதர் சிவலிங்க வடிவில் இருக்கிறார். பிரகாரத்தில் விநாயகர், அறம் வளர்த்த நாயகி, அஷ்டபுஜ துர்க்கை, தென்முகக்கடவுள், துர்க்கை, முருகன், சண்டிகேஸ்வரர் சன்னதிகள் உள்ளன. ஏழு குதிரை பூட்டிய வட்டவடிவத் தேரில் சூரியன் நடுவிலும், மற்ற கிரகங்கள் எட்டுத் திசைகளை பார்த்த நிலையில் தவக்கோலத்தில் உள்ளனர்.
 நடராஜருக்கு சிதம்பரத்தில் பொற்சபை, மதுரையில் வெள்ளி சபை, திருவாலங்காட்டில் ரத்தினசபை, குற்றாலத்தில் சித்திரசபை, திருநெல்வேலியில் தாமிரசபை என பஞ்ச சபைகள் இருக்கின்றன. இங்குள்ள சபை பளிங்கு கற்களால் ஆனதால் பளிங்கு சபை எனப்படுகிறது.
 கோயில் நுழைவுவாயிலின் கிழக்கே ஆராய்ச்சி மணியும், மனுநீதி முறைப்பெட்டியும் வைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் தங்கள் விருப்பத்தை எழுதி இந்தப் பெட்டியில் செலுத்தி விட்டு மூன்று முறை மணியை ஒலிக்கிறார்கள். இந்த மனுக்கள் காலை பூஜையின் போது அர்ச்சகரால் நடராஜர் முன் ரகசியமாக படிக்கப்படும். விருப்பம் நிறைவேறியதும் நன்றிக் கடிதத்தை பக்தர்கள் செலுத்துகின்றனர்.
 கவலை, நோய், வறுமை என துன்பப்படும் போது ‘எல்லாம் விதிப்படி நடக்கிறது’ என நொந்து கொள்வர். இதிலிருந்து விடுபட அந்தந்த பிரச்னைக்கான தீர்வு தரும் பதிகங்கள் (தேவாரப் பாடல்) அவரவர் ராசிக்கேற்ப சுவரில் பொறிக்கப்பட்டுள்ளன. இதை படித்தால் சிவனருளால் விதியின் கடுமை குறையும்.  
எப்படி செல்வது: நெய்வேலி டவுன்ஷிப் பஸ் ஸ்டாண்ட் அருகில்
விசேஷ நாட்கள்: ஆருத்ரா தரிசனம், ஆனி திருமஞ்சனம், நாயன்மார் குருபூஜை நாட்கள்
நேரம்: காலை 6.00 -–- மதியம் 12 .00 மணி, மாலை 4.00- – இரவு 9.00 மணி.
தொடர்புக்கு: 94438 43912


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !