சுசீந்திரத்தில் வரும் 2ம் தேதி ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா
சுசீந்திரம் : சுசீந்திரம் 18 அடி உயர ஆஞ்சநேயர் சுவாமிக்கு வரும் 2ம் தேதி ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நடக்கிறது.
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் வடக்கு பிரகாரத்தில் ஸ்ரீராமபிரான் சன்னதி நேரெதிரெ 18 அடி உயர ஆஞ்சநேயர் சுவாமி வீற்றிருக்கிறார். ஆஞ்சநேயருக்கு ஆண்டுதோறும் ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு வரும் 1ம் தேதி ஜெயந்தி விழா தொடங்குகிறது. அன்று காலை 5 மணிக்கு கணபதி ேஹாமம், நீலகண்ட விநாயகருக்கு அபிேஷகம் நடைபெறுகிறது.
ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவான 2ம் தேதி காலை 5 மணிக்கு ராம பிரானுக்கு அபிஷேகம், காலை 8 மணிக்கு 18 அடி உயரமுள்ள விஸ்வரூப ஆஞ்சநேயர் சாமிக்கு நல்லெண்ணெய், ஆயிரக்கணக்கான லிட்டர் பால் மற்றும் தயிர், களபம், சந்தனம், குங்குமம், விபூதி, மஞ்சள், அரிசி மாவு, பன்னீர், எலுமிச்சை பழச்சாறு, கரும்புச் சாறு, பஞ்சாமிர்தம், மாதுளைச் சாறு, தேன் என 16 வகையான பொருட்கள் அடங்கிய சோடஷ அபிஷேகம் நடக்கிறது. மதியம் 12 மணிக்கு அலங்கார தீபாராதனை, மாலை 6 மணிக்கு ராமபிரானுக்கு புஷ்பாபிஷேகம், இரவு 7 மணிக்கு ஆஞ்சநேயர் சாமிக்கு பல்வேறு பூக்களால் புஷ்பாபிஷேகம், இரவு 10 மணிக்கு அலங்கார தீபாராதனை போன்றவை நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில், கண்காணிப்பாளர் செந்தில்குமார், மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன் உட்பட பக்தர்கள் செய்து வருகின்றனர்.