மாகாளியம்மன் கோயிலில் பொங்கல் பூச்சாட்டு விழா
பல்லடம்: பல்லடம் அருகே, காளிவேலம்பட்டி கிராமத்தில், பொங்கல் பூச்சாட்டு விழா இன்று (29ம் தேதி) கோலாகலமாக நடந்தது.
பல்லடம் அடுத்த, காளிவேலம்பட்டியில், ஸ்ரீமாரியம்மன் மற்றும் மாகாளியம்மன் கோவில் உள்ளது. 150 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இக்கோவிலில், பொங்கல் பூச்சாட்டு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. டிச., 27 அன்று, அம்மை அழைப்புடன் பூச்சாட்டு விழா துவங்கியது. தொடர்ந்து, பூவோடு எடுத்தல், கும்பம் தாவுதல், மாகாளியம்மனுக்கு ஆடுதல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடந்தன. நேற்று மாரியம்மனுக்கு கிராம மக்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். அதேபோல், இன்று (29ம் தேதி) மாகாளி அம்மனுக்கு வழிபாடு நடந்தது. பொது பொங்கல், மாவிளக்கு எடுத்தல், காமாட்சி அம்மனுக்கு தேர் இழுத்தல் உள்ளிட்டவை நடந்தன. கம்பம் எடுத்த பின், அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அம்மன் ஊர்வலமாக வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நாளை மஞ்சள் நீராட்டு விழாவுடன் விழா நிறைவு பெறுகிறது.