உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ண ஜாலம்

கிருஷ்ண ஜாலம்


ஜாலம் என்றால் மாயம் என்பது பலரது கருத்து.  உண்மையில்லாதது, கற்பனையானது என்பது சிலரது கருத்து.
‘ஜாலம்’ என்ற ஒற்றைச் சொல்லுக்கு இது பொருந்தும். ஆனால் ‘கிருஷ்ண ஜாலம்’ என்றால் இது துளியும் பொருந்தாது. கிருஷ்ணனின் சாகசங்கள் ஜாலமாகவும், அதே நேரத்தில் சத்யமாகவும் கருதப்பட்டன.
ஜாலம் சற்று வளைந்து கொடுக்கும். கிருஷ்ணன் சத்தியத்தைக் காக்க நிறையவே வளைந்து கொடுத்தான். கிருஷ்ண ஜாலத்தை, கிருஷ்ண சத்யம் என்றும் கூறலாம்.
பாண்டவர்களின் வனவாசம் ஒரு வழியாக முடிந்தது. விராட தேசத்தில் அக்ஞாத வாசத்தில் இருந்த போது துரியோதனன் அவர்களை அடையாளம் கண்டான். அவர்களை அழிக்க எண்ணி விராடனின் பசுக்களை கவர்ந்து, போர் மூளச் செய்தான். அதில் பாண்டவர்கள் நிச்சயம் விராடனுக்கு துணை நிற்பார்கள் என்றும், அப்போது அவர்களை அடையாளம் கண்டு அழிக்கலாம் என்றும் திட்டம் தீட்டினான் துரியோதனன்.
அவன் எண்ணப்படி போர் மூண்டது. பாண்டவர்களும் விராடனுக்கு துணை நின்றனர். ஆனால் துரியோதனன் விருப்பப்படி அடையாளம் கண்டு அழிப்பது என்பது முடியாமல் போனதால் அது தோல்வியில் முடிந்தது.
பாண்டவர்களின் அக்ஞாதவாசம் முடிவுக்கு வந்தது. வனவாசம் முடிந்து அவர்களும் ஹஸ்தினாபுரம் திரும்பினர்.  சூதாட்டத்தில் இழந்த தங்களின் நாட்டை திரும்பக் கேட்டனர்.
ஆனால் துரியோதனன் தர மறுத்தான். அது மட்டுமல்ல, விராடனோடு நடத்திய போரில் அர்ஜுனனை அடையாளம் கண்டு கொண்டதாக கூறி பாண்டவர்கள் அக்ஞாத வாசத்தில் தோற்றதாகவும் கூறினான். அவன் கருத்து ஏற்கப்படவில்லை. இருந்தாலும், ‛ஒரு கைப்பிடிமண் தர மாட்டேன்’ என துரியோதனன் கூறினான். அப்படியானால் பாண்டவர்கள் நியாயம் கிடைக்க போரிடுவதை தவிர வழி இல்லை என்னும் நிலை உருவானது. போரிட துரியோதனன் பயப்படவில்லை. சொல்லப்போனால் போர்  மூலம் பாண்டவரை மிச்சமின்றி அழிக்க முடியும் என எண்ணினான். காரணம் சகுனி மாமா. இருவருக்கும் இடையில் நடந்த உரையாடல் முக்கியமானது.
‘‘மாமா... விராடனோடு நடந்த யுத்தம் இப்படி எதிர்மறையாகி விட்ட நிலையில் யுத்தம் தான் ஒரே வழி எனக் கூறுவது வினோதமாக உள்ளதே?’’
‘‘வினோதம் இல்லை மருமகனே! விராடனோடு போர்புரியச் சென்ற போது நம்மிடம் திட்டம் ஏதுமில்லை. நம் படை பலம் போதும் என எண்ணி விட்டோம். அவர்களின் வீரத்தை 13 ஆண்டு கழிந்த நிலையில் தெரிந்து கொள்ளும் வாய்ப்பாக அமைந்தது. எனவே தோல்வியாக கருதாதே. அது நமக்கொரு பாடம்.’’ என்றான்.
‘‘சரி. இனி  போர் என்றால் மட்டும் நாம் வெல்வோமா?’’
‘‘அதிலென்ன சந்தேகம்? பிதாமகர் பீஷ்மர் போதும். இதுவரை எதில் தோற்றுள்ளார்? அவர் முன் நின்று அர்ஜுனனால் போரிட முடியுமா? அர்ஜுனனுக்கே வித்தை சொல்லித் தந்த துரோணாச்சாரியார். அவரது சாதுர்யங்களை கொண்டுள்ள அஸ்வத்தாமன். அவ்வளவு ஏன்? இதுவரை நாக அஸ்திரத்தை ஒருமுறை கூட பயன்படுத்தாத கர்ணன். எல்லாவற்றுக்கும் மேலாக பிரம்மச்சர்யத்தோடு விஷ்ணு தனுசை வைத்திருக்கும் விதுரன், இப்படி இத்தனை பேர் நம்மைச் சுற்றி இருக்கும்போது தோல்வியை பற்றி நினைக்கலாமா?’’
‘‘மாமா... எல்லாம் சரி...! ஆனால் இவர்கள் அவ்வளவு பேரும்  கிருஷ்ணனுக்கு ஈடாகுமா? அவன் அவர்கள் பக்கம் இருக்கிறானே?’’
தன் பூனைவிழிகள் விரியச் சிரித்த சகுனி, அழுத்தமாய் பேசத் தொடங்கினான்.
‘‘துரியோதனா... நீ கேட்டது சரியான கேள்வி! அதே சமயம் நாம் வெற்றி பெற ஒரு சுலபமான வழி உள்ளது. சொல்லட்டுமா?’’
‘‘முதலில் சொல்லுங்கள். என்ன செய்ய வேண்டும் நான்?’’
‘‘எந்த கிருஷ்ணனை நினைத்து நீ பயந்தாயோ, அந்த கிருஷ்ணனின் பலம் பாண்டவர்களுக்கு பயன்படக் கூடாது என்றால். அந்த மாய கிருஷ்ணன் நம் வசப்பட வேண்டும்’’
‘‘நம் வசமா..? அந்த கிருஷ்ணனா? சாத்தியம் தானா....’’
துரியோதனன் ஒன்றுக்கு மூன்றாக கேள்வி கேட்டான்.
‘‘துரியோதனா.. காரியம் நடக்க கழுதையின் காலைக் கூட பிடிக்கலாம் என கேள்விப்பட்டதில்லையா?’’
‘‘ஐயோ.... மாமா! கிருஷ்ணன் என்ன கழுதையா.... போகட்டும் என்று காலில் விழ..?’’
‘‘விழத்தான் வேண்டும் துரியோதனா... விழத்தான் வேண்டும். பொல்லாத அந்த கிருஷ்ணனை அர்ஜுனன் பாணியில்  அடக்கி விடு.’’
‘‘எப்படி?’’
‘‘முந்து. அர்ஜுனன் முந்திக் கொள்ளும் முன்  நீ முந்து. துவாரைக்கு போ. அந்த கிருஷ்ணனை துதித்திடு. உதவி கேட்டு வந்திருப்பதாக கூறு’’
‘‘கிருஷ்ணன்  உதவுவானா?’’
‘‘அவனொரு  துதி மயங்கி!  பரந்தாமா என்றால் போதும். சொக்கி விழுந்து விடுவான். அதைச் சொல்லியே எத்தனை கோபியர்கள் அவனுக்கு பத்தினியாக ஆகியுள்ளனர் தெரியுமா?’’
‘‘தெரியும் மாமா. தெரியும். பதினாறாயிரம் பேர்களாமே?’’
‘‘ஆம் பட்டமகிஷிகள் எட்டேபேர். அனால் மானசீகப் பத்தினியர் பதினாறாயிரம். எல்லோரும் அவனைப் பணிந்தே வாழ்வு பெற்றனர்’’
‘‘அது சரி. இப்படி நடிப்பது என் வீரத்திற்கு அழகா மாமா..?’’
‘‘அழகில்லை என்றால் அதை உண்மையாக  சொல்லி விட்டுப்போ. உன்னை யார் வேண்டாம் என்றது?’’
‘‘அது எப்படி முடியும் என்னால்? சிசுபாலன் முதல் என்  நலன் விரும்பிகள் பலரை அழித்து ஒழித்தவன் ஆயிற்றே இந்த கிருஷ்ணன்.’’
‘‘பைத்தியக்காரா....அவ்வப்போது உனக்குள் நீ  சிக்கிக் கொள்கிறாய். வெற்றியை லட்சியமாக கொண்டவர்கள் இதை போல  சிந்திக்க மாட்டார்கள். நடிப்பாயோ...இல்லை நிஜமாக துதிப்பாயோ கிருஷ்ணனின் பலம் நமக்கு போரில் பயன்பட வேண்டும். அவனோ, அவன் படைகளோ போர்க்களத்தில் பாண்டவருக்கு உதவியாக ஆயுதம் ஏந்தி போராடக் கூடாது. இப்போதே புறப்படு. இதை நீ சாதித்து காட்டினால், ஒரு பட்டயத்தில் உன் வெற்றியை  இப்போதே  நான் எழுதி கொடுத்து விடுகிறேன்‘‘ என்றான் சகுனி. துரியோதனனும் கிருஷ்ணனை நோக்கி  முதல் முறையாக புறப்பட்டான். மறுபுறம் இதே போல், ஆனால் அர்ஜுனனும் பக்தியோடு புறப்பட்டது தான் விந்தை!
கிருஷ்ணனின் ஞான திருஷ்டிக்கு புலனாகாததும் உண்டா என்ன?
அரங்கநாதர் போல தலைக்கு வலக்கையை அண்டக் கொடுத்தவனாக,  அர்த்த மண்டபத்தில் ஒரு கோழித்துாக்கத்துக்கு தயாரானான் கிருஷ்ணன்.
மருதாணி தரித்த தன் திருப்பாதங்கள் பளிச்சென தெரியும் விதமாக நீட்டிக் கொண்டு கண்களையும் மூடிக் கொண்டான்.
அவன் ஜாலம் பாண்டவர்கள் விஷயத்தில் தொடங்கும் முதல் கட்டம் இது...


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !