உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சங்கடங்கள் நேரும் போது தான் கடவுளை நினைப்பது..!

சங்கடங்கள் நேரும் போது தான் கடவுளை நினைப்பது..!

குஜராத்தின் முந்தைய தலைநகர் அகமதாபாத்தில் இருந்து 190 கி.மீ., தொலைவில் உள்ளது ராஜ்பிப்ளா என்ற இடம்.  அதிலிருந்து மேலும் கொஞ்ச நேரம் தொடர்ந்தால் தேதியா பரா என்ற இடத்தை அடையலாம்.  வழியில் மலைப்பகுதி மேலும் கீழுமாக ஏறி இறங்க வேண்டும்.  அங்கு அமைந்துள்ளது குந்தி மாதா கோயில்.
ஆலயத்தைச் சுற்றிலும் இயற்கைக் காட்சிகள் சிறப்பாக உள்ளன.  பாண்டவர்களுடன் வனம் வந்த குந்தி இங்கு சிவனை வழிபட்டதாக கூறுகிறார்கள்.  உள்ளூர்வாசிகள் குந்தி தேவியை மனமார வழிபடுகிறார்கள்.  மலைவாழ் மக்கள் கோழி, ஆடுகளை குந்தி தேவிக்குப் படைக்கிறார்கள்.  குந்திமாதா என்ற பெயரில் அவர்களின் குல தெய்வமாகவே இருக்கிறார்.
குந்தி தேவியை பார்வதிதேவியின் அம்சம் என்று கருதுபவர்கள் இவர்கள்.  தன் வாழ்வில் எத்தனையோ மேடு பள்ளங்களை சந்தித்தாலும் தனது பொறுமையாலும் கண்ணனின் மீது கொண்ட நம்பிக்கையாலும் அவற்றைக் கடந்து வந்தவர் குந்தி.  ஒரு முறை ‘உங்களுக்கு என்ன வரம் வேண்டும் கேளுங்கள்’ என்று கண்ணன் குந்தியைக் கேட்க,  ‘எனக்கு மேலும் மேலும் பிரச்னைகளை கொடு. சங்கடங்களை கொடு’ என்று பதிலளித்தார் குந்தி. காரணம் சங்கடங்கள் நேரும் போது தான் கடவுளை நினைப்பது மனிதனின் வழக்கம் என்பதால்தான்.  தெளிவான சிந்தனைக்கு இதை விட வேறென்ன உதாரணம் வேண்டும்?
சுற்றுப்புறத்தில் சிறிய கடைகள் நிறைய உள்ளன. என்றாலும் கோயில் என்பது ஒரு நடுத்தர அளவிலான கூடம் மட்டுமே.  அதில் வெண் உலோகத்தில் காணப்படுகிறது குந்திதேவியின் சிறிய சிலை.  வெள்ளிக்கிழமைகளில் அந்த உருவத்தைச் சுற்றி சாமந்தி மலர்கள் குவிக்கப்படுகின்றன. பக்தர்கள்  அனைவரும் குந்திமாதாவின் பாதத்தைத் தொட்டு வழிபடுகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !