உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதுரகிரியில் அமாவாசை வழிபாடு: பல ஆயிரம் பக்தர்கள் தரிசனம்

சதுரகிரியில் அமாவாசை வழிபாடு: பல ஆயிரம் பக்தர்கள் தரிசனம்

வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் மார்கழி மாத அமாவாசை வழிபாட்டை முன்னிட்டு பல ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

இதனை முன்னிட்டு இன்று அதிகாலை முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தாணிப்பாறை மலை அடிவாரத்தில் குவிந்திருந்தனர். காலை 6:30 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு உடல், வெப்ப பரிசோதனைக்கு பின்னர் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். காலை 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பக்தர்கள் வருகை அதிகளவில் இருந்ததால், மதியம் 12 மணி வரை சுமார் 10 ஆயிரம் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்து திரும்பினர். கோவிலில் நடந்த அமாவாசை வழிபாட்டில் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு கோயில் பூசாரிகள் சிறப்பு பூஜைகள் செய்தனர். திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். வனத்துறை, போலீஸ் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஏற்பாடுகளை அறங்காவலர் ராஜா பெரியசாமி, செயல் அலுவலர் விஸ்வநாதன் செய்திருந்தனர். அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !