பழநி நகரம் வெறிச்சோடியது: பாதயாத்திரை பக்தர்கள் அவதி
பழநி: தமிழக அரசின் கொரோனா கட்டுப்பாட்டால் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பழநி நகரம் வெறிச்சோடி காணப்பட்டது. பாதயாத்திரை பக்தர்கள் சிரமம் அடைந்தனர். பழநிக்கு தைப்பூசத்தை முன்னிட்டு பாதயாத்திரையாக பக்தர்கள் வருகை புரிந்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசு கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஞாயிறு முழு ஊரடங்கு அறிவித்தது. இதனால் பழநி நகரில் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இந்நிலையில் பாதயாத்திரையாக வருகை புரிந்த பக்தர்கள் வரும் வழியில் ஆங்காங்கே உள்ள தங்கும் இடங்களில் தங்கி உள்ளனர். பழநி அடிவாரம் பகுதியில் பாதயாத்திரை பக்தர்கள் மிகச்சிலரே வருகை புரிந்தனர். குறைந்த அளவில் வந்த பக்தர்கள் கோயில் வாயிலில் நின்று தரிசனம் செய்தனர். முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பேருந்து வசதிகள், உணவு வசதிகள் இல்லாததால் மடங்கள் மற்றும் விடுதிகளில் தங்கியுள்ளனர். ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய நபர்களை போலீசார் எச்சரித்து, அறிவுரை கூறி, அபராதம் விதித்தனர்.