திருநள்ளார் சனீஸ்வரர் கோவிலில் சம்வஸ்திரா அபிஷேகம்
காரைக்கால்: திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் நேற்று 4ம் ஆண்டு கும்பாபிஷேக தினத்தை முன்னிட்டு சம்வஸ்திரா அபிஷேகம் நடைபெற்றது.காரைக்கால் திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார்.இக்கோவில் ராஜகோபுரம் மற்றும் சுவாமி சன்னதி கள் புனரமைக்கப்பட்டு, கடந்த 2019ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது.கும்பாபிஷேகம் நடந்த மாத உத்திராட நட்சத்திர நாளில் சம்வஸ்திரா அபிஷேகம் நடத்தப்படுகிறது. கும்பாபிஷேகத்தின் நான்காம் ஆண்டு விாழ நேற்று நடந்தது. அதையொட்டி நேற்று முன்தினம் மாலை விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், பூர்ணாஹூதி நடந்தது. யாக பூஜை முடிந்து, நேற்று கோவில் உட்பிரகாரத்தில் கலசங்களுடன் சிவாச்சாரியார்கள் வலம் வந்தனர்.தர்பாரண்யேஸ்வரர், சொர்ணகணபதி, பிரணாம்பிகை, முருகன், சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது.தருமபுரம் ஆதீனம் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள், கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.