தியாகராஜர் கோவில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் இன்று துவக்கம்
திருவொற்றியூர்: தியாகராஜர் கோவில் மாசி பிரம்மோற்சவ திருவிழா ஏற்பாடுகள், சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளதாக, கோவில் உதவி கமிஷனர் தெரிவித்துள்ளார்.
சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் கோவிலில், ஆண்டுதோறும் மாசி மாதம், ௧௦ நாள் பிரம்மோற்சவ திருவிழா நடைபெறுவது வழக்கம்.இவ்வாண்டு திருவிழா, இன்றிரவு கொடியேற்றத்துடன் துவங்கி, 17ம் தேதி முடிகிறது. தியாகராஜ சுவாமி கோவிலின் முக்கிய திருவிழா என்பதால், ஏராளமான பக்தர்கள் குவிவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து, கோவில் உதவி கமிஷனர் சித்ரா தேவி கூறியதாவது:தியாகராஜர் கோவில் மாசி பிரம்மோற்சவ திருவிழாவை, வெகு விமரிசையாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.பக்தர்கள், கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி, கோவிலுக்கு வர வேண்டும். முடிந்த வரை, கோவிலுக்கு வருபவர்கள் தடுப்பூசி செலுத்தி இருத்தல் அவசியம். தவிர, 60 வயதிற்கும் மேற்பட்ட முதியோர் மற்றும் குழந்தைகள் வருவதை தவிர்க்க வேண்டும். கோவில் நிர்வாகம் சார்பில், அனைவரும் திருவிழா நிகழ்வைக் காண, யுடியூப் சேனல் வழியாக, முக்கிய நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு வரும் வெளியூர் பக்தர்கள் தங்க, தட்சிணாமூர்த்தி கோவில் மண்டபம் பின் புறம் உள்ள ஹால், தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. குடிநீர், கழிப்பறை மற்றும் இ - டாய்லெட் வசதிகள் செய்யப் பட உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.