வினையறுக்கும் வேல் பூஜை
திருவாலங்காடு : பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில், 21ம் ஆண்டு வினையறுக்கும் வேல் பூஜையை ஒட்டி ஆயிரங்கணக்கான பக்தர்கள் கோவிலில் தரிசனத்துக்காக குவிந்தனர்.திருவாலங்காடு அடுத்த, பாகசாலை கிராமத்தில், பாலசுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், நெடுவேல் ஒன்று நிறுவப்பட்டு, மாசி மாதத்தில் வினையறுக்கும் வேல் பூஜை ஆண்டுதோறும் நடந்து வருகிறது.
இந்நிலையில், நேற்று, 21ம் ஆண்டு வினையறுக்கும் வேல் பூஜையையொட்டி, நேற்றுமுன்தினம், இரவு 7:00 மணிக்கு யாக பூஜை, மஹா தீபாராதனை நடந்தது. நேற்று, காலை 7:00 மணிக்கு, கற்பக விநாயகர், பாலசுப்ரமணியர், சண்முகருக்கு அபிஷேகம் நடைபெற்றது.பின், காலை 9.30 மணியில் இருந்து, 11:00 மணி வரை, 33 வகையான பழ திரவியங்களில் வேலுக்கு அபிஷேகமும், அலங்காரமும், வினையறுக்கும் வேல் பூஜையும் நடைபெற்றது.இதில் பாகசாலை மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசனம் செய்தனர்.மாசி மகத்தின் கடைசி நாளான இன்று, காலை 9.30 மணிக்கு பஞ்சமூர்த்தி வீதியுலாவும், மதியம் 12.00 மணிக்கு தீர்த்தவாரி யும் நடைபெற உள்ளது.