உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குத்தாலம் உக்தவேதீஸ்வரர் கோயிலில் மே 8ம் தேதி கும்பாபிஷேகம்: தருமை ஆதீனம்

குத்தாலம் உக்தவேதீஸ்வரர் கோயிலில் மே 8ம் தேதி கும்பாபிஷேகம்: தருமை ஆதீனம்

மயிலாடுதுறை: குத்தாலம் உக்தவேதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் மே 8ஆம் தேதி நடைபெறுமென தருமையாதீனம் அறிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் தருமை ஆதீனத்திற்கு சொந்தமான அரும்பன்ன வனமுலை நாயகி சமேத உக்தவேதீஸ்வரர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற இத்தலத்தில் கடும் தவத்தின் பலனாக பரதமா முனிவருக்கு மகளாக பிறந்த பார்வதி தேவியை சிவபெருமான் திருமணம் செய்து கொண்டதாக ஐதீகம். இதற்கு அடையாளமாக சுவாமி தனது பாதுகைகளையும், கைலாயத்தில் இருந்து தனக்கு நிழலாக வந்த உத்தால மரத்தையும் இங்கு விட்டுச் சென்றதாக தல வரலாறு கூறுகிறது. இதனால் இத்தலத்தில் உத்தால மரமே தலவிருட்சமாக உள்ளது. மேலும் காசிக்கு இணையான இத்தலத்தில் எழுந்தருளியுள்ள உகதவேதீஸ்வரரை சூரிய பகவான் வழிபட்டதாகவும், இங்கு எழுந்தருளியுள்ள மங்கல சனீஸ்வரரை வழிபட்டால் சங்கடங்கள் யாவும் நீங்கும் எனவும், சுந்தர் தனது சரும நோய் தீர இத்தலத்தில் உள்ள தீர்த்தத்தில் நீராடி சுவாமியை தரிசிக்க உடற்பிணி நீங்கியதாகவும் வரலாறு கூறுகிறது. சுவாமி அம்பிகையை திருமணம் செய்துகொண்ட இத்தலத்தில் சுவாமி அம்பாளை வழிபட்டால் திருமண பாக்கியம் கைகூடும் என்பது ஐதீகம் .இத்தகைய சிறப்புமிக்க கோவிலின் திருப்பணிகள் வேலைகள் முடியும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் நேற்று இக்கோவிலுக்கு வருகை தந்த தருமபுரம் ஆதீனம் 27வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் திருப்பணி வேலைகளை பார்வையிட்டார். தொடர்ந்து சாமி தரிசனம் செய்த பின்னர் குருமகாசன்னிதானம் இக்கோவிலின் கும்பாபிஷேகம் வரும் மே 8ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மிதுன லக்கினத்தில் காலை 9 மணியிலிருந்து 10:30க்குள் நடைபெறும் என அறிவித்துள்ளார். இந்நிகழ்ச்சியில் தருமை ஆதீன தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !