சிதிலமடைந்த சுந்தர விநாயகர் கோவில் சீரமைக்கப்படுமா?
விழுப்புரம் : விழுப்புரம் அருகே சிதிலமடைந்த நுாறாண்டு பழமையான சுந்தரவிநாயகர் கோவிலை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.விழுப்புரம் அடுத்த கண்டமானடியில் 100 ஆண்டுகள் பழமையான சுந்தரவிநாயகர் கோவில் உள்ளது.
இக்கோவில், கருவறை அர்த்த மண்டபம், மகா மண்டபம், முருகன் சன்னதி, முகமண்டபம் மடப்பள்ளி ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய மதில் சுவருடன் கோபுரமின்றி நுழைவு வாயிலுடன் காணப்படுகிறது.மேலும் கருவறை சதுர வடிவம் கொண்டது. கருவறையின் வெளிப்புற பகுதி உபபீடம், ஜகதி, முப்பட்டை குமுதம், கண்டம், பட்டிகை, வேதிகை, அரைத்துாண்கள், தெற்கு, மேற்கு, வடக்கு ஆகிய திசைகளில் மூன்று தேவக்கோட்டைகளுடன் காணப்படுகிறது.இந்த அமைப்பு யாவும் செங்கல் மற்றும் சுண்ணாம்பு கொண்டு கட்டப்பட்டுள்ளது.
இந்த மகா மண்டபத்தின் வடக்குப் பகுதியில் முருகன் சன்னதி அமைந்துள்ளது. கருவறையில் வள்ளி தெய்வானை சமேதமாக முருகன் அருள்பாலிக்கிறார். இங்கு, தென்புறம் உள்ள துாணில் கல்வெட்டு காணப்படுகிறது.இந்த கல்வெட்டில் துந்துபி வருடம் கி.பி.,1922 என பொறிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், இந்தக் கோவில் 100 ஆண்டுகள் பழமையானது என கருதப்படுகிறது.இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில், தற்போது பராமரிப்பின்றி பக்தர்கள் வழிபாட்டிற்கு வழி இல்லாமல் சிதிலமடைந்துள்ளது.
இக்கோவிலுக்கு சொந்தமான நிலம், இந்த நிலம் இந்து சமய அறநிலையத் துறையால் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.ஆனால், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இக்கோவிலை புனரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், இக்கோவிலுக்கென தனி அர்ச்சகர் இல்லை.எனவே, கோவிலை புனரமைத்து பக்தர்கள் வழிபாடு நடத்த இந்து சமய அறநிலையத்துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.