ஜம்புலிபுத்தூர் கதலி நரசிங்கப்பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் எப்போது?
ஆண்டிபட்டி: ஜம்புலிபுத்தூர் கதலி நரசிங்கப்பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் இந்த ஆண்டில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்து வருவதாக ஹிந்து அறநிலையத் துறையினர் தெரிவித்தனர். இக்கோயில் 800 ஆண்டுகள் பழமையானது. ஒவ்வொரு ஆண்டும் 10 நாள் நடைபெறும் சித்திரை திருவிழாவில் இருநாட்கள் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். இக்கோயிலுக்கு 2006ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. 15 ஆண்டுகளை கடந்தும் கும்பாபிஷேகம் இன்னும் இல்லை.
கோயில் கும்பாபிஷேகம் குறித்து ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கும்பாபிஷேகத்திற்கான முன்னேற்பாடு பணிகளில் கோயில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்வது குறித்து தொல்லியல் துறை வல்லுநர் குழு, மண்டல ஸ்தபதி குழு, மாவட்ட, மாநில ஹெரிடேஜ் கமிட்டி ஆய்வு மேற்கொண்டுள்ளனர். ஆய்வு முடிவுகள் அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. கோயில் புனரமைப்பு மற்றும் கும்பாபிஷேக பணிகள் மேற்கொள்வதற்கு உபயதாரர்களுடன் கலந்து பேசி மதிப்பீடுகளும் தயார் செய்யப்பட்டு வருகிறது. தமிழக அரசின் ஒப்புதல் கிடைத்தபின் இந்த ஆண்டில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் துவங்கும். இவ்வாறு தெரிவித்தனர்.