மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில் மகா சிவராத்திரி விழா
சென்னை : மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில் மகா சிவராத்திரி விழா நாளை (மார்.,1) கோலாகலமாக நடைபெறவிருக்கிறது. கபாலீசுவரர் சன்னதியில் வைத்து பூஜிக்கப்பட்ட ருத்ராட்சமும், இராமேசுவரம் அருள்மிகு இராமநாத சுவாமி திருக்கோயிலிலிருந்து புனித தீர்த்தம் வரவழைக்கப்பட்டு வருகின்ற அனைத்து பக்தர்களுக்கும் வழங்கப்படுகிறது.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்களின் வழிகாட்டுதலின்படி சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான சென்னை, இராமகிருஷ்ணா மடம் சாலையில் உள்ள விளையாட்டு மைதானத்தில் மகா சிவராத்திரி தினத்தன்று சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடைபெற இருப்பதையொட்டி இன்று 28.02.2022 கபாலீசுவரர் கோயில் இணை ஆணையர்/செயல் அலுவலர் திருமதி த.காவேரி அவர்கள் விழா நடைபெறும் இடத்தை பார்வையிட்டு செய்தியாளர்களிடம் பேசும்போது, மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு மயிலாப்பூரில் அமைந்துள்ள ஏழு சிவாலயங்களுக்கு பக்தர்கள் வருகை தந்து தரிசனம் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த சிவ பக்தர்களுக்கு ஆன்மீக தொடர்பான சொற்பொழிவுகள், பட்டிமன்றம், கலை நிகழ்ச்சிகள், பரதநாட்டியம் போன்ற பக்தி சார்ந்த நிகழ்ச்சிகள் 01.03.2022 மாலை 6 மணி முதல் 02.03.2022 காலை 6 மணி வரை நடத்திட ஒரே நேரத்தில் சுமார் 3000 நபர்கள் அமர்ந்து கண்டு களிக்கின்ற வகையில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு வருகின்ற பக்தர்களுக்கு குடிநீர் வசதியும், நடமாடும் கழிப்பறை வசதி செய்யப்பட்டுள்ளது. அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில் சன்னதியில் வைத்து பூஜிக்கப்பட்ட ருத்ராட்சமும், இராமேசுவரம் அருள்மிகு இராமநாத சுவாமி திருக்கோயிலிலிருந்து புனித தீர்த்தம் வரவழைக்கப்பட்டு வருகின்ற அனைத்து பக்தர்களுக்கும் வழங்கப்படவுள்ளது. அரங்கத்துக்குள் இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு அனுமதியில்லை. வாகனங்களை நான்கு மாடவீதிகளில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் நிறுத்தி கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டின் முக்கிய திருக்கோயில்களான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலிருந்து பஞ்சாமிர்தம், தினைமாவு, மதுரை அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலிருந்து நெய்தோசை, அப்பம், மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோயிலிருந்து லட்டு, அப்பம், நாமக்கல், அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயிலிருந்து வடைமாலை உள்ளிட்ட பிரசாதங்கள் விற்பனைக்கு வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முக்கிய திருக்கோயில்களின் தலபுராணம், தலவரலாறு, திருக்கோயில்களின் வழிகாட்டி நூல்கள் போன்ற அரிய வகை நூல்கள் விற்பனை செய்யப்படவுள்ளன. கபாலீசுவரர்கோயில் சார்பாகவும், உபயதாரர்கள் சார்பாகவும், பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல், புளியோதரை, வெண்பொங்கல் பிரசாதம் வழங்கப்படும். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருவாசகத்தின் முக்கிய பகுதியான சிவபுராணம் பாராயணம் ஓதுவார்கள் முழுங்க அதை பக்தர்கள் சொல்லுகின்ற வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கு நடைபெறும் நிகழ்ச்சிகள் அனைத்தும் முக்கிய தொலைக்காட்சிகளில் மற்றும் நேரலையாகவும், Youtube channel (http://www.youtube.com/c/MYLAPOREKAPALEESWARAR TEMPLE) மூலமாகவும் ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின்போது காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையர் திரு. ஜெயராமன், உயர்மட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர் திருமதி தேச மங்கையர்கரசி, அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயில் துணை ஆணையர் (கூடுதல் பொறுப்பு) திருமதி கவேனிதா உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.
பிரமாண்ட சிறப்பு கலை நிகழ்ச்சிகள்: இந்து சமய அறநிலையத்துறை சாப்பில் மகா சிவராத்திரியை முன்னிட்டு திரு.சுகிசிவம், திருமதி தேசமங்கையர்க்கரசி, திரு.செந்தில் கணேஷ் மற்றும் திருமதி ராஜலட்சுமி குழுவினருடன் 01.03.2022 அன்று 12 மணி நேர பிரமாண்ட சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின் படி மகா சிவராத்திரியை முன்னிட்டு வருகிற 01.03.2022 அன்று இந்து சமய அறநிலையத்துறை சார்பாக சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான சென்னை, இராமகிருஷ்ணா மடம் சாலையில் உள்ள விளையாட்டு மைதானத்தில் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் சிறப்பு கலை நிகழ்ச்சிகள் தொடக்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் மங்கள இசை மாலை 6.00 மணி முதல் 6.30 மணி வரை மேகன்தாஸ் நாதஸ்வர குழுவினர் அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில், துவக்க விழா மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை சிறப்பு அழைப்பாளர்களைக் கொண்டு விழா துவங்கப்படும், சிவ தரிசனம் இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரை திருமுறை மற்றும் வேத பாராயணம் மயிலை கபாலீஸ்வரர் ஆலய வேத விற்பன்னர்கள் மற்றும் ஓதுவார்கள், கயிலை வாத்தியம் – வடிவுடை மாணிக்கம் சங்கநாத அறக்கட்டளை, ஜீகள் பந்நி நடனம் இரவு 8.30 மணி முதல் 9.00 மணி வரை தரானா அகாடமி ஆஃப் கதக், பட்டிமன்றம் நமது வளர்ச்சிக்கு பெரிதும் தேவைப்படுவது பக்தியா? தொண்டா? நடுவர் நடுவர் கலைமாமணி சொல்வேந்தர் திரு.சுகி சிவம் குழுவினர் பக்தியே என்கிற தலைப்பில் இலக்கிய செல்வர் முனைவர் இரா.மாது, பைந்தமிழ் அரசி திருமதி பாரதி பாஸ்கர், தொண்டே என்கிற தலைப்பில் நகைச்சுவை நயாகரா திரு.செ.மேகனசுந்தரம், சிந்தனைச் செல்வர் சிவ.சதீஷ்குமார், தமிழ் பக்தி இசை இரவு 10.30 மணி முதல் 11.30 மணி வரை திருமதி சுசித்ரா, திருமதி வித்யா மற்றும் திருமதி வினையா குழுவினர்கள், சிவமயம் – நாட்டிய நாடகம் இரவு 11.30 மணி முதல் 1.00 மணி வரை ஸ்ரீ தேவி நிருத்யாலயா குழுவினர் டாக்டர் ஷீலா உன்னிகிருஷ்ணன் அவர்களின் மாணவிகள் நடனம் நடைபெறும்.
அதனை தொடர்ந்து சர்வம் சிவமயம் – தியானம் மற்றும் சொற்பொழிவு – வாரியார் சுவாமிகளின் மாணவி கலைமாமணி திருமதி தேச மங்கையர்க்கரசி, பக்தி பாடல்கள் நள்ளிரவு 2.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை சூப்பர் சிங்கர்ஸ் சத்யபிரகாஷ், மாளவிகா சுந்தர், ஸ்ரீநிஷா, நாராயணன் மற்றும் குழுவினர், கிராமிய பக்தி இசை பாடல்கள் அதிகாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை சூப்பர் சிங்கர்கஸ் டைட்டில் வின்னர் – திரு.செந்தில், திருமதி ராஜலட்சுமி கலைக் குழுவினர் ஆகியோரின் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற இருக்கின்றன.