ஆஸ்தானம் அடைந்தார் காரமடை அரங்கநாதர் சுவாமி
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் திருவிழா முடிந்ததைடுத்து, அரங்கநாத பெருமாள் ஆஸ்தானம் அடைந்தார்.
காரமடை அரங்கநாதர் கோவில் மாசி மகத் தேர்த்திருவிழா கடந்த, 11ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில், சுவாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பெட்டதம்மன் அழைப்போம், திருக்கல்யாண உற்சவம் நடந்தது. 17ம் தேதி தேரோட்டமும், அதை தொடர்ந்து பந்த சேவையும், பரிவேட்டையும், தெப்போற்சவம் ஆகியவை நடந்தன. திருவிழாவில் நிறைவு நாளில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக, அரங்கநாத பெருமாள் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார். பக்தர்கள் பெருமாளை வழிபட்டு வந்தனர். நேற்று கிருஷ்ண பக்ஷ ஏகாதசியை முன்னிட்டு, அரங்கநாத பெருமாளுக்கு ஸ்தபன திருமஞ்சனம் செய்யப்பட்டது. அரங்கநாத பெருமாள் வெண்பட்டு குடையில், கோவில் வளாகத்தில் வலம் வந்து, ஆஸ்தானம் அடைந்தார். பின்பு உச்சிக்கால பூஜையுடன் விழா நிறைவடைந்தது.