பூச்சியூரில் சிவராத்திரி விழா ஆணிக்கால் செருப்பணிந்து பூசாரி ஊர்வலம்
பெ.நா.பாளையம்: நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள பூச்சியூர், பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா உள்ளிட்ட பகுதிகளில் சிவராத்திரி விழா சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள பூச்சியூரில் மகாலட்சுமி கோயில், வேட்டைக்கார சாமி கோயில், வீரபத்திரசாமி, தொட்டம்மாள் கோவில்கள் உள்ளன. இங்கு ஆண்டுதோறும் சிவராத்திரியையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடக்கும். இந்த ஆண்டும் சிவராத்திரி சிறப்பு விழாக்கள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பூச்சியூரில் நாளை காலை, 5:00 மணிக்கு மகாலட்சுமி கோயில் பூசாரி தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து, வேட்டைக்காரசாமி ஊர்வலம் நடக்கிறது. இதில் கோவில் பூசாரி ஆணிக்கால் செருப்பணிந்து நடந்து வரும் நிகழ்வு நடக்கிறது. தொடர்ந்து வீரபத்திரசாமி, தொட்டமாள் ஊர்வலம் நடக்கிறது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். இதேபோல நரசிம்மநாயக்கன் பாளையத்தில் உள்ள விருத்தபுரீஸ்வரர் கோவிலில் இன்று இரவு முதல் விடிய, விடிய சிறப்பு அலங்காரத்தில் விருத்தபுரீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில் மகாசிவராத்திரி விழா இன்று இரவு, 10:00 மணிக்கு துவங்கி நாளை அதிகாலை, 5:00 மணிக்கு முடிகிறது. விழாவையொட்டி பஜனை, சொற்பொழிவு, திருமுறை, பண்ணிசை, சிவநாம சங்கீர்த்தனம், நடனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.