போர் மூள்வது அஞ்ஞானத்தால் தான்
கோவை:இரு நாடுகளுக்கு இடையே போர் மூள்வது, மனிதருக்குள் பகை உணர்வால் நடக்கவில்லை; அவர்களுக்குள் இருக்கும் அஞ்ஞானத்தால் தான் பாதிப்புகளை சந்திக்கிறோம், என, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு பேசினார்.
கோவை ஈஷா யோக மையத்தில், 112 அடி ஆதியோகி சிலை முன் மஹா சிவராத்திரி விழா நேற்று நடந்தது. மாலை 6:00 மணிக்கு, தியானலிங்கத்தில் பஞ்சபூத ஆராதனையுடன் விழா துவங்கியது. லிங்கபைரவி தேவி மஹாயாத்திரை மற்றும் தியானம் நடந்தது. இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளும் அரங்கேறின.
விழாவில் சத்குரு பேசியதாவது: ஓராண்டில், 13 சிவராத்திரிகள் உள்ளன. அதில், மஹா சிவராத்திரி, மிகவும் மகத்துவம் வாய்ந்தது. இந்நாளில் பூமிக்கும், சூரியனுக்கும் இடையே உள்ள தொடர்பால், நம்முள் உள்ள உயிர் சக்தி இயற்கையாகவே மேல் நோக்கி நகரும். இரவு முழுதும் நீங்கள் துாங்காமல் முதுகுத்தண்டை நேராக வைத்து விழிப்பாக இருந்தால், மகத்தான நன்மைகளை பெறமுடியும். உலகில் பல பிரச்னைகள் உள்ளன. இரு நாடுகளுக்கு இடையே போர் மூள்கிறது. சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார பிரச்னைகள் உள்ளன. இவை அனைத்தும் மனிதனுக்குள் இருக்கும் குற்றம் மற்றும் பகை உணர்வால் நடக்கவில்லை. அவர்களுக்குள் இருக்கும் அஞ்ஞானத்தால் தான் இவ்வளவு பாதிப்புகளை சந்திக்கிறோம். உங்களுக்குள் இருக்கும் ஞான ஒளியை இந்த மஹா சிவராத்திரி நாளில் ஏற்றி, விழிப்புணர்வான வாழ்வு நோக்கி நகர வேண்டும். உயிர்சக்தியை தெம்பாக்கி, வாழ்வை ஆனந்தமயமானதாக மாற்றிக் காட்டுங்கள். கொரோனா தொற்றால் இழந்த உற்சாகத்தை மீட்டெடுப்போம்.இவ்வாறு சத்குரு பேசினார்.லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், இந்தியாவுக்கான கொலம்பியா துாதர் மரியானா பெசேகோ மோன்டஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.