மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ள
செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த மயானக்கொள்ளை நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்தி கடன் செலுத்தினர்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் மாசி தேர் திருவிழா 1ம் தேதி மகா சிவராத்திரியன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இரண்டாம் நாள் விழாவாக இன்று மயானகொள்ளை நிகழ்ச்சி நடந்தது. காலை 9.30 மணிக்கு கோவிலில் இருந்து சிம்ம வாகனத்தில் விஸ்வரூப கோலத்தில் அங்காளம்மன் மயானத்திற்கு புறப்பட்டு 10 மணிக்கு மயானத்தில் எழுந்தருளினார். அங்கு அங்காளம்மன் பிரம்ம கபாலத்தை ஆட்கொள்ளும் நிகழ்ச்சி பூசாரிகளால் நடத்தப்பட்டது. அப்போது நுாற்றுக்கணக்கான பக்தர்கள் சாமி வந்து ஆடினர். தொடர்ந்து பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்த காய்கனிகள், உணவு பொருட்கள், தானியங்களை வாரி இரைத்து கொள்ளை விட்டனர். பக்தர்கள் நாணயங்கள், பழங்கள், தின்பண்டங்கள், உயிர் கோழிகளை வீசி எரிந்து நேர்த்தி கடன் செலுத்தினர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராமு, அறங்காவலர் குழு தலைவர் வடிவேல், அறங்காவலர்கள் செந்தில்குமார், தேவராஜ், ராமலிங்கம், செல்வம், சரவணன், சந்தானம், மேலாளர் மணி மற்றும் கோவிவில் ஊழியர்கள் செய்திருந்தனர். செஞ்சி டி.எஸ்.பி., பிரியதர்ஷினி தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சென்னை, புதுச்சேரி, விழுப்புரம், வேலுார் உள்ளிட்ட ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.