பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த கோனியம்மன் தேர் : கோவையில் கோலாகலம்
கோவை: கோவை கோனியம்மன் கோவில் தேர் திருவிழா, நேற்று கோலாகலமாக நடந்தது. திரளான பக்தர்கள் வழிபட்டனர்.
கோவை, கோனியம்மன் கோவில் தேர்த் திருவிழா பிப்., 14ல், முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து, பூச்சாட்டு, கிராம சாந்தி, கொடியேற்றம் நடந்தது. புலி, கிளி, சிம்மம், அன்னம், காமதேனு, வெள்ளை யானை வாகனங்களில், அம்மன் திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.நேற்று முன்தினம் இரவு, அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் விமரிசையாக நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடந்தது. நேற்று காலை திருத்தேருக்கு அம்மன் எழுந்தருளினார். ராஜவீதி தேர் நிலை த்திடலில் நேற்று பகல், 2.05 மணிக்கு, பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சரவணம்பட்டி கவுமார மடாலயஆதினம் குமரகுருபர சுவாமிகள், கோவை காமாட்சிபுரம் ஆதினம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் திருத்தேர் வடம் பிடித்து துவங்கி வைத்தனர். தேர் தேர் நிலை திடலில் இருந்து புறப்பட்டு ராஜவீதி, ஒப்பணக்காரவீதி, வைசியாள் வீதி, கருப்பகவுண்டர் வீதி வழியாக வந்து, மீண்டும் தேர் நிலைத்திடலை அடைந்தது. கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் திருவிழாவில், பக்தி பரவசத்துடன் பங்கேற்றனர்.