அங்காள பரமேஸ்வரி கோயிலில் அக்னி குண்டம் இறங்கிய பக்தர்கள்
அன்னூர்: அங்காள பரமேஸ்வரி கோவில் குண்டம் திருவிழா நேற்று நடந்தது.
அன்னூர், தென்னம்பாளையம் ரோட்டில், 100 ஆண்டுகள் பழமையான அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், மகாசிவராத்திரி குண்டம் திருவிழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 27ம் தேதி அபிஷேக ஆராதனை, மயான பூஜையும், 28ம் தேதி நந்தி அழைத்து வருதலும், அணிகூடை ஊர்வலமாக எடுத்து வருதலும் நடந்தது. நேற்று முன் தினம் காலை அம்மன் திருக்கல்யாண உற்சவமும், மாலையில் அம்மன் ஊர்வலமும் நடந்தது. நேற்று காலை 6:00 மணிக்கு குண்டம் இறங்கும் நிகழ்ச்சி துவங்கியது. அன்னூர், திருப்பூர், அவிநாசி, கோவையை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் அக்னி குண்டத்தில் இறங்கி அம்மனை வழிபட்டனர். மதியம் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும், மாலையில் மாவிளக்கு ஊர்வலமும் நடந்தது. இன்று காலை மஞ்சள் நீராட்டு விழாவும், கொடி இறக்குதலும் அம்மன் ஊர்வலமும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை குலதெய்வ பக்தர்கள் வழிபாட்டு மன்றத்தினர் செய்திருந்தனர்.