மீனாட்சி அம்மன் கோயில் வரலாற்றுத்தகவல்கள்!
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கட்டடக்கலை, சிற்பங்களை வெறுமனே பார்க்காமல், புரிதலோடு பார்த்தால், சுற்றுலா பயணிகளுக்கு தகவல்கள் முழுமையாகச் சென்றடையும், என கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.,) மற்றும் "இன்டாக் அமைப்பு சார்பில், சுற்றுலா வழிகாட்டிகளுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு மதுரை மண்டல சி.ஐ.ஐ.,தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடந்தது.மேலூர் அரசு கலைக்கல்லூரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் அம்பை மணிவண்ணன் பேசியதாவது: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கட்டடம், சிற்பங்கள் அமைப்புகள் பற்றி, ஆழமாக சுற்றுலா பயணிளுக்கு தெரிவிக்க வேண்டும். இக்கோயில் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட, தொடர்ச்சியான வரலாற்றை கொண்டது. பல்சமய ஒற்றுமையை வலியுறுத்துகிறது. கிளிக்கூண்டு மண்டபம் அருகே கர்ணன் சிற்பம், அதில் அம்பு நுனியில் நாகம், ஆயிரங்கால் மண்டபத்தில் குதிரை அருகே அரியநாத முதலியார் சிற்பம், அதன் கீழ் நரி சிற்பம் உள்ளன. அந்த சிற்பம் மாணிக்கவாசகருக்காக, சிவபெருமான் நரியை பரியாக்கியதை குறிக்கிறது. இதை சிலேடையுடன் பார்க்க வேண்டும்.இதில் திருவிளையாடல் புராணத்தின் தாக்கம் உள்ளது. மன்னர் விஸ்வநாத நாயக்கர் துவங்கி, ராணிமங்கம்மாள் காலம் வரை கட்டடக்கலையில் புதுமை புகுத்தி, முழுவளர்ச்சி பெற்றது. நவராத்திரி விழா, தெப்பத்திருவிழா, வசந்த உற்சவம் திருமலை நாயக்கர் ஆட்சியில் கொண்டாட துவங்கினார். இதை இதை வெறுமனே பார்க்காமல், புரிதலோடு பார்த்தால், சுற்றுலா பயணிகளுக்கு தகவல்கள் முழுமையாகச் சென்றடையும், என்றார். சி.ஐ.ஐ.,சுற்றுலா திட்ட அமைப்பாளர் ருக்மணி தியாகராஜன், இன்டாக் அமைப்பாளர் அரவிந்த்குமார் சங்கர், சுற்றுலா வழிகாட்டிகள் சங்க தலைவர் சிவகுருநாதன் பங்கேற்றனர்.