உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொள்ளாச்சி கோவில்களில் அன்னதான திட்டம்:அரசின் அறிவிப்புக்கு அதிகாரிகள் காத்திருப்பு!

பொள்ளாச்சி கோவில்களில் அன்னதான திட்டம்:அரசின் அறிவிப்புக்கு அதிகாரிகள் காத்திருப்பு!

பொள்ளாச்சி: பொள்ளாச்சி சரகத்திலுள்ள, இரு கோவில்களில் அன்னதான திட்டம் துவங்க அனைத்து ஏற்பாடுகளுடன், அரசின் அறிவிப்பை எதிர்நோக்கி இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.தமிழகத்தில், இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் 38 ஆயிரத்து 481 கோவில்கள் உள்ளன. கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்கு தினமும் மதியம் இலவசமாக அன்னதானம் வழங்கும் நோக்கில், கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் அன்னதான திட்டம் துவங்கப்பட்டது.கடந்தாண்டு வரை 362 கோவில்களில், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக, ஆணையர் அலுவலகத்தில் தனியாக வங்கி கணக்கு துவங்கப்பட்டு, நன்கொடையாக பெறப்படும் நிதி வரவு வைக்கப்படுகிறது. நிதி வசதியுள்ள கோவில்களின், உபரிநிதியிலிருந்து சிறப்பு நிரந்தர முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், 35 கோடி ரூபாய் இத்திட்டத்திற்காக கிடைத்துள்ளது. இந்த நிதி ஆதாரத்திலிருந்து கிடைக்கும் வட்டி தொகையை கொண்டு, இத்திட்டத்தை செயல்படுத்த நிதி பற்றாக்குறையாக உள்ள கோவில்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. அரசின், இந்த திட்டத்திற்கு பக்தர்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது.நடப்பாண்டில், இத்திட்டம் மாநிலம் முழுவதும் 300 கோவில்களுக்கு விரிவுப்படுத்தப்படும் என, அரசு அறிவித்தது. ஆனால், இதுவரை அன்னதான திட்டத்தை துவங்க வேண்டிய கோவில்கள் குறித்த பட்டியலை அரசு வெளியிடவில்லை.

பொள்ளாச்சி சரகத்தில், பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவில், பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் அன்னதான திட்டத்தின் கீழ் பரிந்துரை செய்யப்பட்டது. அரசு அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில், அன்னதானத்திற்கு தேவையான அடுப்பு, பாத்திரங்கள் பக்தர்களிடம் இருந்து நன்கொடையாக பெற்று தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அரசின் அறிவிப்புக்காக, அதிகாரிகள் காத்திருக்கின்றனர். பொள்ளாச்சி இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் தமிழ்வாணன் கூறியதாவது:தமிழகத்தில், நடப்பாண்டில் 300 கோவில்களில் அன்னதான திட்டத்தை விரிவுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில், பொள்ளாச்சி சரகத்தில் இரண்டு கோவில்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.அரசு அறிவித்தவுடன், அமைச்சரின் முன்னிலையில் அன்னதானம் திட்டம் துவங்கப்படும். கோவிலின் ஆண்டு வருமானம் அடிப்படையில், தினமும் எத்தனை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் என்பது முடிவு செய்யப்படும். குறைந்தபட்சம் தினமும் 40 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் வாய்ப்புள்ளது.இவ்வாறு, தமிழ்வாணன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !