க.புதுப்பட்டி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
கம்பம்: க. புதுப்பட்டி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று காலை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். க.புதுப்பட்டி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம், 40 ஆண்டுகளுக்கு பின் நேற்று நடந்தது. மூன்று நாட்கள் பல்வேறு யாகசாலை பூஜைகளும், சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடந்தன. நேற்று காலை நான்காம் கால யாகசாலை பூஜைகள் துவங்கியது. மகா பூர்ணஹூதி, தீபாராதனை, யாத்ராதானம், கடம் புறப்படுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. காலை 10.30 மணிக்கு வேதங்கள் முழங்க, மங்கள வாத்தியங்கள் இசைக்க, வானத்தில் கருடன் வட்டமிட, மாரியம்மன் கோயில் கலசங்களில் மீது சிவாச்சாரியார்கள், புனிதநீர் ஊற்ற, மகா கும்பாபிஷேகம் நடந்தது. கோயிலில் எழுந்தருளியுள்ள காளியம்மன், விநாயகர் கோபுர கலசங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டது. கும்பாபிஷேகத்தை காண பல கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். ஐகோர்ட் நீதிபதி த.முருகேசன், கலெக்டர் கே.எஸ். பழனிச்சாமி, எம்.எல்.ஏ., ராமகிருஷ்ணன், செசன்ஸ் நீதிபதி பாண்டுரங்கன், மாஜிஸ்திரேட் கண்ணன், சப்ஜட்ஜ் லியாக்கத்அலிகான், விரைவு நீதிமன்ற மாஜிஸ்திரேட் திரிவேணி,பிரமலை கள்ளர் சங்க தலைவர் கே.எம்.பி.எல். ரவி, விவசாயிகள் சங்க நிர்வாகி சிவாஜிமோகன், டாக்டர் மணிமோகன், டி. கண்ணன், உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை சின்னகிருஷ்ணசாமி, சிவநேசன், லோகன்துரை, கிருஷ்ணகுமார், குணாளன் செய்திருந்தனர்.