காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயில் கும்பாபிஷேகப் பணிகள் துவங்குவது எப்போது?
 உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயில் திருப்பணி மற்றும் கும்பாபிஷேகம் நடைபெறுவது எப்போது என்று பக்தர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை திருக்கோவில் தென்காளஹஸ்தி என்ற பெயர் பெற்றது.இங்கு ராகு கேது தனித்தனி சன்னதிகளில் தம்பதி சகிதமாக எழுந்தருளியுள்ளனர். காலசர்ப்ப தோஷ நிவர்த்தி தலம் என்றும் அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு வாரமும் ராகு-கேது வேளையில் இங்கு நடைபெறும் சிறப்பு பூஜைகளில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்து பங்கேற்கின்றனர். சிறப்புக்கள் பல பெற்ற இந்த கோவில் திருப்பணி மற்றும் கும்பாபிஷேகம் நடைபெற்று 15 ஆண்டுகளுக்கு மேலாகிறது.கடந்த ஆண்டு திருப்பணி மற்றும் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணி குழுவை தமிழக அரசு நியமித்தது.ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி சண்முகம் தலைமையில் அமைக்கப்பட்ட இந்த குழு, பல திருப்பணிகளை செய்தது.ஒரு சில பணிகள் மட்டும் பாக்கி இருக்கும் நிலையில், திருப்பணிக்குழுவின் பதவிக்காலம் முடிவடைந்தது. அத்தோடு ஆட்சியும் மாறியது. அ.தி.மு.க. ஆட்சியில் திருப்பணிக்குழு நியமிக்கப்பட்டதால், திருப் பணியை தொடர அந்தக் குழுவிற்கு அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை. இதனால் கோயில் வளாகத்திற்குள் தோண்டிய பள்ளம் அப்படியே விடப்பட்டுள்ளது. ஏற்கெனவே பணிகளை மேற்கொண்ட குழு அல்லது புதிய திருப்பணிக்குழுவை நியமித்து மீதமுள்ள பணிகளை முடித்து, கும்பாபிஷேகம் நடத்த ஹிந்து சமய அறநிலையதுறை முன்வர வேண்டும் என்று பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.