கொல்லங்குடி வெட்டுடையார் காளி கோயிலில் கொடியேற்றம்
 சிவகங்கை: கொல்லங்குடி வெட்டுடையார் காளி கோயிலில் கொடியேற்றம், காப்பு கட்டுதலுடன் நேற்று பங்குனி திருவிழா தொடங்கியது.
இங்கு பங்குனி விழாவிற்காக மார்ச் 11 அன்று மாலை அனுக்கை, விக்னேஸ்வர பூஜைகள் நடந்தன. நேற்று காலை 7:15 மணி முதல் 8:15 மணிக்குள்கோயில் தங்க கொடி மரத்தில் கொடியேற்றி வைத்து பங்குனி திருவிழாவை துவக்கினர். இரவு 7:15 மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், கேடக வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது. பங்குனி விழாவை முன்னிட்டு அம்மன் தினமும் காலையில் கேடக வாகனத்திலும், இரவு பூதகி, கிளி, அன்னம்,காமதேனு, காளை, சிம்மம், தங்க குதிரை உள்ளிட்ட வாகனங்களில் திருவீதி உலா நடைபெறும்.முக்கிய நிகழ்வாக மார்ச்19 அன்று இரவு அம்மன் தங்க குதிரை வாகனத்தில் வலம் வருவார். மார்ச் 20ம் தேதி 9ம் திருநாளை முன்னிட்டு காலை 8:15 மணி முதல் 9:15 மணிக்குள்தேரோட்டம் நடைபெறும். மார்ச் 21 அன்று காலை 9:15 மணிக்கு புஷ்ப பல்லக்கில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருளாசி வழங்குவார். மார்ச் 22 பதினொன்றாம்திருநாளை முன்னிட்டு வெள்ளி ஊஞ்சல் உற்ஸவத்துடன் விழா நிறைவு பெறும். ஏராளமான பக்தர்கள் அம்மனுக்கு பட்டு உடுத்தியும், எலுமிச்சை மாலை சாற்றியும், பால்குடம், அக்னி சட்டி எடுத்தும் நேர்த்தி செலுத்துவர். அறநிலைய இணை கமிஷனர் செல்லத்துரை, உதவி கமிஷனர் சிவலிங்கம் ஆகியோர் தலைமையில் செயல் அலுவலர் ஞானசேகரன் ஏற்பாட்டை செய்து வருகிறார்.