உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாச்சியார்கோவில் சீனிவாசபெருமாள் கோவிலில் கல்கருட சேவை

நாச்சியார்கோவில் சீனிவாசபெருமாள் கோவிலில் கல்கருட சேவை

தஞ்சாவூர்: கும்பகோணத்தை அடுத்த நாச்சியார்கோவிலில் வஞ்சுளவல்லி தாயார் சமேத சீனிவாசபெருமாள் கோவிலில் நேற்று இரவு கல்கருட சேவை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

108 திவ்யதேசங்களில் 20வது திவ்யதேசமாகவும், சோழநாட்டு திருப்பதிகள் 40ல் 14வது திருப்பதியாகவும் போற்றப்படுகிறது. இங்கு மூலவராகவும் உற்சவராகவும் விளங்கும் கல்கருடபகவான் ஆண்டுக்கு இரண்டு முறை மட்டும் உற்சவராக வீதியுலா வருவது பிரசித்திபெற்றது. ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனித்திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நிகழ்ச்சி கடந்த 10ம் தேதி  நடைபெற்றது. முன்னதாக விழா நாட்களில் தினமும் காலை, மாலை பல்வேறு வாகனங்களில் பெருமாள், தாயார் வீதியுலா நடைபெறுகிறது. நான்காம் நாள் விழாவான உலகபிரசித்திபெற்ற கருடசேவை நிகழ்ச்சி  நேற்று இரவு 7 மணியளவில் நடைபெற்றது. கருடபகவான் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் சன்னதியிலிருந்து முதலில் நான்குபேர், அடுத்து 8 பேர், 16 பேர், 32 பேர், 64 பேர் என கருடபகவானை சுமந்து கருடபகவான் வாகன மண்டபம் காட்சியளித்தார். அப்போது  பக்தர்கள் வெள்ளத்தில் கருடபகவான் நீந்தி வருவது போல் காட்சியளித்தார். இந்த  கருடசேவையின்போது நூற்றுக்கணக்கான  பக்தர்கள் கோவிலின்  வெளிப்புறமும், உள்புறமும் காத்திருந்து தரிசனம் செய்வதனர்.  9ம் நாள் விழாவாக வருகிற 18ம் தேதி காலை திருத்தேரோட்டமும், மதியம் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது. கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக எளிய முறையில் கோவில் உள்பிரகாரத்திலேயே நடைபெற்ற கல் கருட சேவை இவ்வாண்டு பக்தர்கள் பங்கேற்போடு வெகு சிறப்பாக நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !