தஞ்சாவூர்: கும்பகோணம் பகுதியில் உள்ள நான்கு சிவாலயங்களில் பங்குனி உத்திர தேரோட்டம் நடந்தது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நகரில் உள்ள நாகேஸ்வரன், ஆதிகம்பட்ட விஸ்வநாதர், கொட்டையூர் கோடீஸ்வரர் ஆகிய 3 சிவாலயங்களிலும் பங்குனி உத்திர விழா கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து விழா நாட்களில் தினமும் காலை, மாலை நேரங்களில் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெற்று வருகிறது. விழாவில் கடந்த 13-ம் தேதி ஓலை சப்பரமும், 15-ம் தேதி இரவு திருக்கல்யாணமும் நடந்தது. இதையடுத்து, விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நாகேஸ்வரன் கோவில், ஆதிகம்பட்ட விஸ்வநாதர் கோவில், கொட்டையூர் கோடீஸ்வரர், திருபுவுனம் கம்பகரேஸ்வரர் கோவில் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம்பிடித்து இழுத்தனர். இதைத் தொடர்ந்து (18-ம் தேதி) பங்குனி உத்திர திருவிழாவான நாளை மகாமகம் குளத்தில் நாகேஸ்வரர், கம்பட்ட விஸ்வநாத சுவாமி கோயில்களின் சார்பில் பகல் 12 மணி முதல் 1 மணிக்குள் தீர்த்தவாரி வைபவமும், இரவு தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது. இதே போல் கொட்டையூர் கோடீஸ்வரர் கோவிலின் தீர்த்தவாரி காவிரி ஆற்றில் நடைபெறுகிறது.